பாகிஸ்தானில் சிறுமி மலாலா மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த தலிபான் இயக்கத்தின் முன்னாள் செய்தி தொடர்பாளரான எசானுல்லா எசான் அந்நாட்டு சிறையில் இருந்து தப்பி ஓடி உள்ளார்.

தப்பியோடிய குறித்த நபர் ஒலிப்பதி நாடாவொன்றையும் வெளியிட்டுள்ளார்.

2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதியில் பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிறுமி மலாலா யூசுப்பை தலிபான்கள் கழுத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

இதில் படுகாயம் அடைந்த மலாலா, நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிகிச்சை பெற்று குணமடைந்தார் . பின்னர் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மலாலாவை மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கைதுசெய்யப்பட்ட தலிபான் இயக்க செய்தி தொடர்பாளரான எசானுல்லா எசான், கடந்த 2014 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பெஷாவரில் இராணுவ பள்ளியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கும் காரணமானவராவார்.

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், ஜனவரி ,11 ஆம் திகதி சிறையில் இருந்து தப்பிச் சென்றதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்புக்கள் கூறி இருந்தன.

இந்நிலையில் இவர் ஒலிநாடாவொன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதில், கடவுளின் உதவியால் ஜனவரி 11 அன்று வெற்றிகரமாக நான் பாதுகாப்பு படையினரின் பிடியில் இருந்து தப்பித்து விட்டேன்.

2017 இல் நான் சரணடைந்த போது அளித்த வாக்குறுதிகளை பாகிஸ்தான் படைகள் நிறைவேற்றவில்லை. அதனாலேயே சிறையில் இருந்து தப்பினேன் என அதில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தான் இருக்கும் இடத்தை அதில் வெளிப்படுத்தவில்லை. சிறையில் இருந்த தப்பி ஓடிய நிலையில், குறித்த நபர் ஒலிநாடாவை வெளியிட்டுள்ளது பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே  கருதப்படுகின்றது.