(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு எயார் எஸ் ரக விமானங்களைக கொள்வனவு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் மோசடிகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் போதிய தகவல்கள் இருந்தும் கடந்த அரசாங்கம் அவற்றை மூடிமறைக்க சில அமைச்சர்கள் முற்பட்டுள்ளனர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

எயார் பஸ் விமானக் கொள்வனவு உடன்படிக்கையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி தலைவர்  அநுரகுமார திஸாநாயக்கவினால்  நிலையியற் கட்டளை 27 2இன கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இன்று சபையில் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், 

பிரான்ஸ் நாட்டு நிறுவனமொன்றுடன் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இதற்கு எதிராக வட்ட நவடடிக்கைகளை முன்னெடுக்க போதிய தகவல்கள் கிடைத்தும் அவற்றை மூடிமறைத்துள்ளது.

இருந்தபோதும் தற்போது ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கும் இந்த ஊழல், மோசடிகள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு சட்ட மாஅதிபர் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவையும் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு முறைப்பாடொன்றை தெரிவித்திருக்கின்றது.

பிரித்தானிய க்ரவுன் நீதிமன்றத்தின் வெளிப்படையான தீர்ப்பின் பின்னர் இதுதொடர்பிலான ஆவணங்களை பிரித்தானியாவின் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பிலான அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது. சட்ட ரீதியான நடவடிக்கைகளின் பிரகாரம் பொறுப்புக்கூறும் தரப்பிடமிருந்து இழப்பீட்டை பெற்றுக்கொள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் எதிர்பார்கிறது.

ஸ்ரீலங்கன் நிறுவனம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்திருந்தார். இந்த ஆணைக்குழுவுக்கு ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் அதிகாரிகள் பல தகவல்களை வழங்கியுள்ளனர். இதுதொடர்பில் நீண்டகாலம் விசாரணைகள் நடைபெற்றுள்ளன. சட்ட மாஅதிபருக்கும் அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.