“காலையில் ஏழு மணிக்கு பெண்கள் அனைவரும் கடற்கரைக்கு வந்து மீன்களை கழுவி அரிந்து உப்புத்தூள் கலந்து பீப்பாயில் போட்டு ஒரு நாள் முழுவதும் அதனை பதப்படுத்துவோம்”. இது தான் எமது நாளார்ந்த பணி என்கிறார் மீன்களை பதப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ள பெண்ணொருவர்.

குட்டித்தீவு மீனவக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கருவாட்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்திலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான நீர்கொழும்பு அதிகளவு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கக்கூடிய ஒரு கடற்கரை நகரமாகும்.

இந்த நகரத்திலுள்ள குட்டித்தீவு என்ற கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான விஜியாவின் கதை இது.  இவரின் கணவர் சுகயீனமுற்றிருப்பதால் விஜியாவின் உழைப்பிலேயே குடும்பம் தங்கியுள்ளது.

குட்டித் தீவு கடற்கரை கிராமத்தில் சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்த 1200 பேர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பெருமளவில் மீன் பிடித்துறையையும் கருவாட்டு உற்பத்தியையும் ஜீவனோபாய தொழிலாகக் கொண்டுள்ளனர்.

“1988ஆம் ஆண்டு முதல் கருவாட்டு உற்பத்தியில் கூலித் தொழிலாளியாக நான்கு ஐந்து பெண்களுடன் இணைந்து இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றேன்.

ஒரு வாரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு தான் தொழில் இருக்கும். எப்போதாவது 5 தொடக்கம் 10 மீன் பீப்பாய்கள் வரும் ஒரு பீப்பாய்க்கு 500 ரூபாய் கிடைக்கும்.

அதனை நான்கு பேரும் பகிர்ந்துகொள்ளுவோம். மாத வருமானம் இல்லை. ஆகவே அன்றன்று கிடைக்கும் பணத்தை செலவழித்து விட்டு மாத இறுதியில் கையில் ஒரு சதமெனும் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றோம்” என்று கூறும் விஜியாவோடு சேர்ந்து இயங்கும் பல பெண்களின் கண்ணீர் இந்த கடல் நீரில் கலப்பது எவருக்குமே தெரியாத சோகமாகும்.

கடலோர சமூகத்தினரான மீனவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதமில்லை. தொழிலுக்கு போனால் திரும்பி வருவதோ அல்லது மீன் கிடைக்கும் என்பதற்கோ எந்த உறுதியும் இல்லை. தினமும் கருவாடோடு கருவாடாக வெயிலில் காய்ந்து. கருவாட்டு உற்பத்தியில் ஈடுபடும் இந்த பெண்கள் சொல்லொணா துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

“பீப்பாய்களில் போட்டு வைத்துள்ள மீன்களை ஒரு நாள் முழுவதும் அவ்வாறு வைத்து பின்னர் அவற்றை நன்கு வெயிலில் உலர விடுவோம். சுமார் மூன்று நாட்களுக்கு வெயிலில் உலர்ந்தவுடன் அவற்றை சேகரித்து பெட்டிகளில் அடைப்போம். மீன் கிடைப்பதை வைத்து தொடர்ச்சியாக இந்த செயல்முறை இடம்பெறும். மாலையில் முதலாளிமார் வந்து அவற்றை கொழும்புக்கு வாகனங்களில் அனுப்பி வைப்பார்கள் என கூறுகிறார் விஜியா.

மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களுக்கமைய 2018 ஆம் ஆண்டுப்பகுதியில் மொத்த மீன் உற்பத்தி 527,060 மெற்றிக்தொன்களாகும். “ஜனஅவபோத” கேந்திரநிலையத்தின் புள்ளிவிபரங்களுக்கமைய நீர்கொழும்பில் சுமார் 6000 தொடக்கம் 7000 வரையான மீனவக் குடும்பங்கள் வாழ்ந்து வருவதோடு, ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் கருவாட்டு உற்பத்தி மற்றும் மீன் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்றாடம் காற்று மழை புயல் என இயற்கையுடன் போராடி மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு உறுதுணையாக இருப்பது மீனவப் பெண்களே. பிடித்து வரப்படும் மீன்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் முன்னிற்பதும் இவர்களே.

நீர்கொழும்பு மீன் சந்தையில் மீன் விற்பனையில் ஈடுபட்டுள்ள பெண்களை படத்தில் காணலாம்.

மொத்த வியாபாரிகளிடம் மீன்களை வாங்கி அவற்றை சந்தையில் விற்பனை செய்யும் பெண்மணியான அயோனி கூறுகையில்,

“பெண்கள் வாழ்வதற்கே போராடி வருகின்றனர். நீர்கொழும்பு லெல்லம சந்தையில் மொத்த வியாபாரிகளிடம் மீன்களை வாங்கி அதனை சந்தையில் விற்று வருகின்றோம். மிகவும் கஷ்டப்பட்டு வட்டிக்கு பணத்தை வாங்கி தான் தொழிலில் ஈடுபடுகின்றேன்.

மாதாந்தம் 10,700 ரூபாவை வட்டியாக செலுத்த வேண்டும். ஒரு வருடத்துக்கான வட்டித்தொகையை செலுத்தி விட்டேன். இன்னும் 3 வருடங்களுக்கு இதனை செலுத்த வேண்டும் என்றார்.

குட்டித்தீவில் இயங்கி வரும் பாத்திமா மீனவப்பெண்கள் சங்கமானது 2000 ஆம் ஆண்டு முதல் இக்கிராமத்தைச் சேர்ந்த பெண்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் அமைப்பாகும்.

சுய தொழில் வாய்ப்பு கடனுதவிகளை வழங்குவதுடன் கடற்கரையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.

50 பெண்கள் இதில் அங்கத்துவம் பெற்றுள்ளனர். கருவாட்டுக்கான விலைத்தளம்பல் காரணமாக இத்துறையில் ஈடுபடுவோர் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்கின்றார் இந்த சங்கத்தின் தலைவியான நிர்மலா பெரேரா.

“எமது பெண்கள் கருவாட்டு உற்பத்திக்காக மீன்களை வாங்கும் போது உடனே அதற்குரிய பணத்தை செலுத்த வேண்டும். கருவாடு நன்கு காய்ந்து விற்கக்கூடிய நிலைமையையடைய 3 நாட்கள் தேவை.

பின்னர் இந்த கருவாடுகளை கொழும்புக்கு அனுப்புவோம். அங்கு அதனை விற்பனை செய்த பின்னர் தான் எமக்கு பணம் கிடைக்கும். உதாரணமாக கருவாட்டுக்காக இன்று 400 ரூபாவுக்கு மீனை வாங்கி. கருவாடாக்கி கொழும்புக்கு அனுப்பி அதனை விற்பனை செய்ய நாட்களாகும் போது கருவாட்டுக்கான விலை 250 ரூபாவாக குறைந்தால் இவர்கள் பெரும் நட்டத்தை எதிர்கொள்ள வேண்டியேற்படும்.

எமது பெண்களின் தொழில் அபிவிருத்திக்கும் எதிர்கால சுபிட்சத்துக்கும் முட்டுக்கட்டையாக இருப்பது எமது கருவாடுகளுக்கு உத்தரவாத விலையின்மையும் எமது கருவாடு எமது சந்தையில் உள்ளபோது வெளிநாடுகளிலிருந்து கருவாடுகளை இறக்குமதி செய்வதும் ஆகும்”.

“இவ்வாறான நிலையில் இவர்கள் மீண்டும் மீன்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணம் கையில் இருப்பதில்லை.

இவர்கள் தனியார் வங்கிகளில் கடனை பெற்றுக்கொண்டு மீனை கொள்வனவு செய்கின்றனர். ஓரிரு பீப்பாய்களை வாங்கும் போது இவர்களின் கையிலுள்ள பணம் தீர்ந்து விடும் .உடனடியான வட்டிக்கு பணத்தை பெற்றுக்கொள்ள எத்தனிக்கின்றனர். இதனால் இவர்களிடம் எந்தவொரு சேமிப்பும் இல்லாமல் இவர்களின் குடும்பத்தினரின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது”.

அரச வங்கிகள் இந்த பெண்களின் அவலநிலையை கண்நோக்கி மிகக்குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடனை பெற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார் நிர்மலா பெரேரா.

நீர்கொழும்பு பிரதேசத்தை பொருத்தவரை கடல் பெரும் வளமாக உள்ளது. கடல் வாழ் உயிரினங்களைக் கொண்டு தொழில் செய்யும் இப்பெண்களை வலுவூட்ட வேண்டியது அரசாங்கத்தின் கடமையல்லவா ? நிலைப்பேண் தகு அபிவிருத்தி இலக்கை அடைவதற்கு பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்யும் மீனவப் பெண்களின் வாழ்வையும் பொருளாதார மேம்பாட்டையும் நிலைநாட்டுவது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

தகவலும் படங்களும் : ஆர். நிரஞ்சனி