எதிர்வரும் 3 வருட காலப்பகுதிக்குள் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தை சிறந்த அரச நிறுவனமாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து சேவை முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று பாராளுமன்ற உறப்பினர் நலின் டி ஜயதிஸ்ஸவினால் வாய் மூலம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பதிலளித்தார்.

எதிர்வரும் 3 மாத காலப்பகுதிக்குள் ஸ்மாட் வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்கும் பணிகளை முழுமையாக அரசாங்கம் பொறுப்பேற்க எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ரயில்வே திணைக்களத்துக்கு தற்காலிக அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள ஊழியர்கள் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில் இந்த ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், ரயில்வே திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.