(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசாங்கத்தின் வரிச்சலுகை மக்களுக்கு வழங்கப்படவில்லை. மாறாக தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளித்த வியாபாரிகளுக்கே வழங்கப்பட்டிருக்கின்றன.

அத்துடன் கொழும்பு பஞ்சிகாவத்த பிரதேசத்தில் வசித்துவரும் மக்களின் வீட்டு வாடகை கடந்த இரண்டு மாதங்களாக செலுத்தப்படாமல் இருக்கின்றது. இதுதொடர்பாக அரசாங்கம் கவனம்செலுத்தவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்சுச் சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அரசாங்கம் மக்களின் வாழ்க்கை சுமையை குறைப்பதற்காக வரி சலுகையை வழங்கியுள்ளதாக தெரிவித்து வருகின்றது. ஆனால் அரசாங்கத்தின் வரிச்சலுகை இதுவரை மக்களுக்கு கிடைக்கவில்லை.

 அப்படியானால் அரசாங்கத்தின் வரிச்சலுகையை வியாபாரிகளே பெற்றுவருகின்றன. ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்த வியாபாரிகளுக்கு நன்றிக்கடனை செலுத்தவே வரிச்சலுகையை அரசாங்கம் வழங்கி இருக்கின்றது.

அத்துடன் மக்களின் அன்றாட உணவுப்பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. மரக்கறி விலை கூடும் குறையும். ஆனால் 98ரூபாவுக்கு அரிசி வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.

ஜனாதிபதி கடைகளுக்கு சென்று அரிசி விலையை குறைக்குமாறு தெரிவித்தார். ஆனால் தற்போதும் மக்கள் உண்ணக்கூடிய அரிசி 98ரூபாவுக்கு இல்லை. 98ரூபாவுக்கு இருக்கும் அரிசி மக்களுக்கு பாவிக்க முடியாதவையாகும்.

மேலும் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்குவதாக தெரிவித்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும் இன்று மரக்கறி கடைகளை பாதுகாத்துக்கொள்ள முடியாதநிலை ஏற்பட்டிருக்கின்றது.

விவசாயிகள் செய்வதறியாது இருக்கின்றனர். எமது காலத்தில் மக்களுக்கு வழங்கிய நிவாரண பொதி தற்போது வழங்கப்படுவதில்லை. அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன என அவர் தெரிவிததார்.