(எம்.ஆர்.எம்.வஸீம்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியில் அரசியல் ரீதியான அச்சுறுத்தல்கள் அதிகரித்துவருகின்றன. இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அமீர் அலி கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாட்டில் அனைத்து இனமக்களும் சமமாகவே நடத்தப்படுவார்களென ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால், மட்டக்களப்பு கல்குடா தொகுதியில் சிலர் பொது மக்களை அரசியல் ரீதியாக அச்சுத்துகின்றனர்.

குறிப்பாக தாமரை மொட்டுச் சின்னத்துக்கே எதிர்காலத்தில் வாக்களிக்க வேண்டுமென அச்சுறுத்துகின்றனர். ஜனாதிபதி இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் இலக்க தகடுகள் இல்லாத சில மோட்டார் சைக்கில்கள் எமது பிரதேசத்தில் இருக்கின்றன. அதிகமாக பேசினால் கடத்தப்படுவீர்கள் எனவும் அச்சுறுத்துகின்றனர். ஜனாதிபதி அவ்வாறான கொள்கையுடையவர் அல்ல என எமக்குத் தெரியும். ஆகவே, பாதுகாப்பு அமைச்சு இந்த விடயம் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இக்குற்றச்சாட்டுக்கு இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பதிலளிக்கையில்,

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளா என வினவியதுடன், உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பில் எமது சமூகத்தில் இன்னமும் கசப்பான அனுபவமொன்று காணப்படுகிறது.

இவ்வாறான செயற்பாடுகள் மோசமானவையாகும். உடனடியாக இச்சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகளை செய்யுமாறும் அதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்க தயார் என்றும் கூறினார்.