(எம்.ஆர்.எம்.வஸீம்)

சுதந்திரதின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது தமிழர்களை தனிமைப்படுத்தியிருக்கும் நிலையில்  வடக்கில் சோதனைச் சாவடிகளை அமைத்து மேலும் அவர்களை சிரமத்துக்கு உள்ளாக்க வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்சுச் சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தப்படுவதாக கூறி வடக்கில் முப்படையினர் மூலம் பல்வேறு சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வவுனியா, கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இவ்வாறு திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பஸ்கள் முதல் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. 

நாட்டில்  போதைப்பொருள் கடத்தப்படும் இடங்கள் எங்கோ உள்ளன. போதைப்பொருள் பண்டாரகமவில் அகப்படும் போது வவுனியாவில் சோதனை செய்கின்றனர். தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடாகவே இதனை பார்ப்பார்கள்.

அத்துடன் கடந்த காலத்தில் சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுவந்த நிலையில் இம்முறை சுதந்திரதின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. இவ்வாறு தமிழர்களை தனிமைப்படுத்தும் அரசியலை செய்துகொண்டு செல்லும் தருணத்தில், வடக்கில்  சோதனைச் சாவடிகளையும் அமைத்து அவர்களை மேலும் சிரமங்களுக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.