திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் லொறியின் உதவியாளராக அழைத்துவந்து லொறிக்குள் தீமூட்டி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை  72 மணித்தியாலங்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்குமாறும்  அவரது  மனைவியை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் கந்தளாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும்,  அக்கொலை இடம்பெற்ற பின்னர் கணவருக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட மனைவியையும் இன்று (06) மாலை கந்தளாய் நீதிமன்ற நீதவான் திஸானி தேனபது முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்  திருகோணமலை-மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான கௌரி மனோகரி (37வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை அதே இடத்தைச் சேர்ந்த அவரது கணவரான கந்தசாமி யோகநாதன் (47வயது) என்பவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த பெப்ரவரி 01ம் திகதி லொறியின் உதவியாளராக அழைத்துச்சென்ற அதே இடத்தைச் சேர்ந்த ஹேவகே விஜேதாஸ (52வயது) என்ற நபரை அழைத்து சென்று மதுபானத்தை கொடுத்து பின்னர் லொறிக்குள் தூங்கியபோது தீயிட்டுக் கொளுத்தியதாகவும் சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

சந்தேக நபருக்கு வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கொன்றிற்கு தீர்ப்பு வழங்கப்படவிருப்பதாகவும், அவ்வழக்கின் போது சந்தேக நபரான கந்தசாமி யோகநாதன் உயிரிழந்துள்ளதாக நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கவே இவ்வாறான கொலையை செய்ததாகவும் சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் லொறியில் சென்ற உதவியாளரை கணவர் தீ மூட்டி கொலை செய்த விடயம் தெரிந்திருந்த போதிலும் 

அவரது  கணவருக்கு உதவிகளை செய்து விட்டு பின்னர் அவரது கணவரான கந்தசாமி யோகநாதன் தீ மூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரின் மரண பதாதைகளை அச்சிட்டு காட்சிப்படுத்திதாகவும்  கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வந்த வேளை உதவியதாகவும் அவர் தம்பலகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

மேலும் கொலை செய்தமை தொடர்பாக வாக்கு மூலங்களை பெற்று வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.