நாட்டின் தேசிய சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ கல்வியகமான இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவத்துக்கான கல்வியகமானது (SLITHM), இம்மாதம் 17ஆம் திகதி BMICH பிரதான மாநாட்டு மற்றும் கலைநிகழ்ச்சி அரங்கில் அதன் 37 ஆவது பட்டமளிப்பு விழாவினை முன்னெடுக்கவுள்ளது.

இதன் போது 100 மாணவர்களுக்கு பட்டம் அளிக்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வில் அரசு, விருந்தோம்பல் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். 

இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சுக்கு மேலதிகமாக காணி அமைச்சராகவும் உள்ள ஜோன் அமரதுங்க பிரதம விருந்தினராகவும் இக் கல்வியகத்தின் முதல் மாணவத் தொகுதியின் Alumni உம், முன்னாள் சிரேஷ்ட பீடத்தின் உறுப்பினருமான டெஸ்மன்ட் பெர்னான்டோ கௌரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ கல்வியகமான இக்கல்வியகம் 1966 ஆம் ஆண்டு முதல் விருந்தோம்பல் துறைக்கு தேவையான தொழில்முறை மனித வளங்களை விருத்தி செய்வதில் முதுகெலும்பாக செயற்பட்டு வருகிறது. SLITHM ஆனது அரசுக்குச் சொந்தமானதாகவும், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கிறிஸ்தவ மத அலுவல்கள் மற்றும் காணி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்பட்டும் வருகிறது.

இந்த வருட பட்டமளிப்பு விழாவில் இக்கல்வியகத்தின் மூன்று மற்றும் நான்காண்டு கற்கைநெறியை பூர்த்தி செய்த தலைமைத்துவ மற்றும் கல்வி சாதனைகளை ஈட்டிய மாணவர்களுக்கு ஹோட்டல் மற்றும் உபசரிப்பு செயல்பாடுகளில் முகாமைத்துவ டிப்ளோமா வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் முகாமைத்துவம் தொடர்பான இலங்கை கல்வியகத்தின் தலைவர் சுனில் திசாநாயக்க கருத்து தெரிவிக்கையில்,

“SLITHM கல்வியகத்தின் 37ஆவது பட்டமளிப்பு விழாவாக இது அமைந்துள்ளதுடன் வளர்ந்துவரும் சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் துறையில் எமது பட்டதாரிகள் உள்நாடு, பிராந்தியம் மற்றும் சர்வதேச ரீதியில் சிறப்பான தொழில்களை பெற்றுக்கொள்வதற்கான தகைமையை கொண்டுள்ளனர்”. என்றார்.

“ஹோட்டல் மற்றும் உபசரிப்பு துறையில் திறன்மிக்க மனித சக்தியை விருத்தி செய்வதும், உபசரிப்பு துறையில் மக்கள் மத்தியில் மேம்படுத்தல்களையும் நாம் மேற்கொண்டு வருகிறோம். எமது Alumni சிரேஷ்ட முகாமைத்துவ ஸ்தானத்தில் இருப்போர்கள் நாட்டின் விருந்தோம்பல் துறைக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கி வருவதுடன், உபசரிப்பு கற்கைக்கான மிகச்சிறந்த கல்வியகமான எம்மை நிலைப்படுத்த வழிவகுத்துள்ளனர்” என்றார்.