யோகோஹாமா துறைமுகத்திலிருந்து தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ள 'டைமண்ட் பிரின்சஸ்' கப்பலில் பயணம் செய்த மேலும் 10 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் குறித்த கப்பலில் பயணித்த 10 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதுடன் அவர்கள் கப்பலிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, வைத்தியசாலைக்கும் கொண்டு சேர்க்கப்பட்டனர்.

இந் நிலையில் இன்றைய தினம் வெளியான 71 பேரின் வைத்திய பரிசோதனை முடிவுகளில் 10 பேர் மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் மொத்தமாக இந்த கப்பலில் பயணித்த 20 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன், ஜப்பானில் தற்போது கொரோனாவால் பாதிப்படைந்தோர் தொகையும் 45 ஆக உயர்வடைந்துள்ளது.

இதனிடையே கப்பலில் பயணித்த மேலும் 171 பயணிகளின் வைத்திய முடிவுகளுக்காக அதிகாரிகள் காத்துள்ளனர். 

தற்போது யோகோஹாமா துறைமுகத்திலிருந்து தொலைவில் நங்கூரமிடப்பட்டுள்ள 'டைமண்ட் பிரின்சஸ்' கப்பலில் 1,045 பணியாளர்களும், 2,666 பயணிகளும் உள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் கரைக்கு கொண்டு வரப்பட்டுள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். எனினும் கப்பலில் உள்ள ஏனைய பயணிகளும், பணியாளர்களும் குறைந்தது 14 நாட்கள் கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு டைமண்ட் பிரின்சஸ் கப்பலிலிருந்து ஹொங்கொங்களில் தரையிறங்கிய 80 வயதுடைய நபரின் விபரம் :

* ஜனவரி 10 ஆம் திகதி சீனாவுக்கு சென்றார்.

* ஜனவரி 17 ஆம் திகதி சீனாவிலிருந்து ஜப்பானுக்கு புறப்பட்டார்.

* ஜனவரி 20 ஆம் திகதி ஹொங்கொங் செல்ல டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் ஏறினார்.

* ஜனவரி 25 ஆம் திகதி ஹொங்கொங்கில் தரையிறங்கினார்.

* ஜனவரி 30 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறி அவரிடம் கண்டறியப்பட்டு, வைத்திய உதவியை நாடினார்.