யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸிற்கு உள்ளானவர்களுக்கான பிரத்யேக சிகிச்சைப் பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் து.சத்தியமூர்த்தி கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனத் தெரிவித்தார்.

Image result for யாழ்.போதனா வைத்தியசாலை"

கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் மத்தியில் எழுந்துள்ள பீதி தொடர்பாக இன்று  யாழ்.போதனா வைத்தியசாலையில், வைத்திய நிபுணர்கள் மத்தியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் இருக்குமோ என்ற சந்தேகத்திற்கிடமானவர்களை அனுமதித்து, விசேட சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்திய நிபுணர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் பூரண சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸ் தொடர்பான சிகிச்சை அளிப்பதற்கு சுகாதார அமைச்சு உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

மேலும் யாழ்ப்பாணத்தில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பாக பீதியடையத் தேவையில்லை என்றும் சீன பெண் தவிர்ந்த ஏனைய எவரும் கொரோனா வைரஸ் குறித்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படவில்லை என மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கோரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் என வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன் கோரோனா வைரஸ் தொற்றுக்கான பெரியளவு நோய்தாக்கங்கள் பாதிக்கப்பட்டவருக்கு இல்லை எனவும் அவருடைய குருதி மாதிரி சோதனை பின்னரே அவருக்கு ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்று தொடர்பில் தெரிவிக்க முடியும், எனினும் இது தொடர்பில் நாங்கள் அவருக்கு முழுமையான சிகிச்சை அளித்து வருகின்றோம். அந்தப் பெண் தனிமைப்படுத்தப்பட்ட விடுதி ஒன்றில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.