(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசாங்கம் எதிர்க்கட்சி ஆளும் கட்சி என்று இல்லாமல் அரச ஊடகங்களில் அனைவருக்கும் சமமான உரிமையை பெற்றுக் கொடுக்கும் என உயர் கல்வி மற்றும் தகவல் தொடர்பாடல் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் 57 வானொலி அலைவரிசைகள் இயங்குகின்றன. அதில் அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்டு இயங்காத நிலையில் 4 அலைவரிசைகள் உள்ளன. கடந்த அரசாங்க காலத்தில் ராஜபக்ஷ்வினர்களுக்கு சேறுபூசும் வகையிலும் எதிர்க்கட்சியுடன்  குரோதம் ஏற்படுத்தும் வகையிலும் அரச ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

அக்காலத்தில் எதிர்க்கட்சியினருக்கு தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு அரச வானொலிகளில் இடமளிப்பதில்லை. ஆனாலும் எமது அரசாங்கத்தின் அதற்கான எந்த தடையும் கிடையாது. ஆளும் கட்சியினருக்கு எதிர்க்கட்சியினருக்கும் சமமான சந்தர்ப்பம் வழங்கப்படும். 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் தலைமையிலான அரசாங்கத்தில்  சேறுபூசும் செயற்பாடுகளுக்கு இடமில்லை. சிறந்த ஊடக கலாசாரம் ஒன்றை உருவாக்கும் வகையில் அரசியல் ரீதியில் அல்லாத  விசேட குழுவொன்று அமைக்கப்பட்டு மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. பின்னர் அதனை ஒரு சட்டமாக கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.