(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியின் பொதுச்செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க பாராளுமன்ற குழு ஏகமனதாக தீர்மானம் வழங்கியுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று கூடிய ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழுவினரால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புதிய கூட்டணியின்  தலைவராக  எதிர்கட்சி தலைவர் சஜித்  பிரேமதாஸ நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் கூட்டணியின்  தலைவர் பதவிக்கான அதிகாரத்தை பயன்படுத்தி கூட்டணிக்கான பொதுச்செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும  பண்டாரவின் பெயரை பரிந்துரை செய்தார்.

புதிய பாராளுமன்ற குழுவில் குருநாகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  அசோக அபேசிங்க பொதுச்செயலாளர் பெயர் பரிந்துரையினை முன்வைத்தார்.

இந்த பெயர் பரிந்துரைக்கு குருநாகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஸார இதுனில் ஒப்புதல் வழங்கினார்.

புதிய கூட்டணியின்  தலைமைத்துவம்,வேட்புமனு குழுவின்   தலைமைத்துவம், பிரதமர் வேட்பாளர் ஆகிய பதவிகளுடனும், பொதுத்தேர்தலை முழுமையான வழிநடத்தும் அதிகாரமும்  எதிர்க்கட்சி  தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு கிடைக்கப்  பெற்றுள்ளன.

சுயநல அரசியல்களுக்காக குறுக்கு வழியிலான ( டீல் ) வைத்துக் கொள்ளும் அரசாங்கத்தை ஸ்தாபிக்காமல் ஊழல் மோசடியற்ற அரசாங்கத்தை தோற்றுவிக்க எதிர்கட்சி  தலைவர் முயற்சிகளை மேற்கொள்வதாக  ஐக்கிய தேசிய முன்னணியினர் குறிப்பிடுகின்றனர்.