சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பூரண நலத்துடன் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என வைத்தியர்கள் உறுதியளித்துள்ளனர்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கியது. இது சீனா மட்டுமின்றி மற்ற சில நாடுகளிலும் உயிர்களை பலிவாங்கியதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இதுவரை 492 பேர் உயிரிழந்துள்ளதுடன், 24,552 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுள் 3,223 பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதுடன், 907 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

இந்நிலையில் சீனாவின் ஷூலாங்ஜீயங் மாகாணத்தின் ஹர்பின் நகரில் உள்ள ஒரு வைத்தியசாலையில் ஒரு நிறைமாத கர்ப்பிணி, கொரோனா வைரஸ் தாக்கியிருக்கலாம் என்ற அடிப்படையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து , வைத்தியர்களின் சிகிச்சையில், அந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதித்தது உறுதி செய்யப்பட்டது. கர்ப்பிணி என்பதால், குழந்தைக்கு நோய் பரவாமல் இருக்க, அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க முடிவு செய்யப்பட்டது. பின் சிகிச்சையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என வைத்தியர்கள் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பரிசோதனை செய்தனர்.

ஆனால் அதிஷ்டவசமாக அந்த குழந்தைக்கு கொரோனா தாக்குதல் இல்லை எனவும் கொரோனாவை வென்று இந்த குழந்தை பிறந்ததாகவும் வைத்தியர்கள் கூறினர். தற்போது தாயும், சேயும் பூரண நலத்துடன் உள்ளதாகவும் , தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் வைத்தியசாலை தரப்பில் கூறப்படுகிறது.