பாகிஸ்தானின் விமானப்படைத்தளபதி முஜாஹித் அன்வர் கான் ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமென்றை மேற்கொண்டு இன்று (05) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தரும் இவர்  இவ்விஜயத்தின் போது , விமானப்படை தளபதிகள், கடற்படை தளபதிகள், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இலங்கை பிரதமர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

எயார் மார்ஷல் முஜாஹித் அன்வார் கான் 1983 டிசம்பரில் பாகிஸ்தான் விமானப்படையின் ஜி.டி.பி கிளையில் நியமிக்கப்பட்டார்.

மேலும் மரியாதைக்குரிய வாள், சிறந்த விமானிக்கான பதக்கம் மற்றும் பி.ஏ.எ.ஃ.ப் அக்கடமியின் தலைவர் கூட்டுப் பணியாளர்கள் தங்கப் பதக்கம் ஆகியவற்றைப் பெற்றவர் ஆவார்.

அவர் பணியாற்றிய காலத்தில், போர் படைத் தளபதி, தந்திரோபாய தாக்குதல் பிரிவு, இரண்டு உயரடுக்கு எ.ஃ.ப் -16 தளங்களின் தளத் தளபதி மற்றும் பிராந்திய விமானக் கட்டளைத் தளபதி உள்ளிட்ட பல்வேறு கட்டளை மற்றும் பணியாளர் நியமனங்களை அவர் வகித்துள்ளார். 

அவர் தகுதிவாய்ந்த விமான பயிற்றுவிப்பாளராகவும், ஜோர்டானின் காம்பாட் கமாண்டர்ஸ் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி, எயார் வோர் கல்லூரி, இஸ்லாமாபாத் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகிய கல்லூரிகளின் பட்டதாரியும் ஆவார்.

விமானப் பணியாளர் தலைவர், விமானப் பணியாளர்களின் உதவித் தலைவர் (செயல்பாடுகள்), விமானப் பணியாளர்களின் துணைத் தலைவர் (செயல்பாடுகள்), இயக்குநர் ஜெனரல் சி 4 ஐ, விமானப் பணியாளர்களின் துணைத் தலைவர் (ஆதரவு) மற்றும் இஸ்லாமாபாத்தின் விமானத் தலைமையகத்தில் பொது விமானப்படை மூலோபாய கட்டளை இயக்குனர் ஆகிய பணிகளையும் அவர் ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் விமானத்தளபதி எஃப் -16, எஃப் -6, எஃப்டி -5, டி-37 மற்றும் எம்.எஃப்.ஐ -17 உள்ளிட்ட பல்வேறு பயிற்சி மற்றும் போர் விமானங்களை செலுத்தியுள்ளார்.

அவரது சிறப்பான சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக, அவருக்கு நிஷன்-இ-இம்தியாஸ் (ராணுவம்), ஹிலால்-இ-இம்தியாஸ் (ராணுவம்), சீதாரா-இ-இம்தியாஸ் (ராணுவம்) மற்றும் தம்கா-இ-இம்தியாஸ் (ராணுவம்) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.