(எம்.மனோசித்ரா)

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைப் போன்று மீண்டும் ஒரு போரை தொடுக்கக் கூடிய சூழல் தற்போது இல்லை எனத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , தேசிய கீத விவகாரத்தை பிரிவினை வாதத்துக்கு பயன்படுத்தும் நோக்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கைவிட வேண்டும்.

அத்தோடு மொழி பயன்பாடு குறித்து இந்தியாவின் அனுபவங்களைப் பெற்றுக் கொள்வது சிறந்தது என்றும் குறிப்பிட்டது. 

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்த கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

நேற்று நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கலந்து கொள்ளாமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதும், அதனை புறக்கணிக்க தீர்மானிப்பதும் அவரவர் உரிமையாகும். எனினும் நிகழ்வில் கலந்து கொள்ளாமைக்கு அவர்களால் கூறப்படும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. 

மொழி என்பது தொடர்பாடலுக்கான ஒரு மூலம் மாத்திரமேயாகும். எனவே தேசிய கீதம் தமிழில் பாடப்படாமையை மொழியை அடிப்படையாகக் கொண்ட பிரச்சினையாக மாற்ற எத்தனிக்கக் கூடாது. 

பிரபாகரனைப் போன்று யுத்தத்தில் ஈடுபடக் கூடிய சூழல் தற்போது இல்லை என்பதை சம்பந்தன் புரிந்து கொள்ள வேண்டும். 

எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஜனாதிபதியுடன் இணைந்து நாட்டு மக்களுக்கான அபிவிருத்தி பணிகளில் இணைந்து கொள்வது பற்றியே அவர்கள் தற்போது சிந்திக்க வேண்டும். அதனை விடுத்து தமிழ் மொழி , சிங்கள மொழி எனக் கூறிக் கொண்டு பிரச்சினைகளை ஏற்படுத்துவது அநாவசியமானதாகும் என இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.