ஸ்ரஸ் அய்யரின் சதம் மற்றும் ராகுலின் அதிரடியான ஆட்டத்தினால் இந்திய அணி நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 347 ஓட்டங்களை குவித்துள்ளது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது நியூஸிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலில் இடம்பெற்ற இருபதுக்கு - 20 தொடரை இந்திய அணி 5:0 என்ற கணக்கில் கைப்பற்றி நியூஸிலாந்தை வைட் வோஷ் செய்தது. 

நியூசிலாந்துக்கு எதிரான இறுதி 20 ஓவர் போட்டியில் தசைப்பிடிப்பால் காயம் அடைந்த ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். 

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானும் ஏற்கனவே ஏற்பட்ட காயத்தால் இந்த தொடரில் இடம் பெறவில்லை. 

நியூசிலாந்துக்கு எதிராக கடைசியாக நடந்த 3 ஒருநாள் (2016, 2017, 2019) போட்டி தொடரிலும் இந்திய அணி வெற்றி வாகை சூடி இருக்கிறது. 

அந்த நம்பிக்கையுடன் களம் காணும் இந்திய அணி ஜொலிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. இதுவரை இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே 14 ஒருநாள் போட்டி தொடர்கள் இடம்பெற்று இருக்கின்றன. 

இதில் இந்திய அணி 8 முறையும், நியூசிலாந்து அணி 4 முறையும் தொடரை வென்று இருக்கின்றன. 2 தொடர் சமநிலையில் முடிந்தது.

இந்திய அணி தற்போது 9 ஆவது முறையாக நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இருக்கிறது. அந்த நாட்டில் இந்திய அணி 2 முறை ஒருநாள் தொடரை வென்றுள்ளது. 

இந் நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் ஹெமில்டனில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி துடுப்பெடுத்தாடுமாறு இந்திய அணியை பணித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஸ்ரேஸ் அய்யரின் சதம் மற்றும் ராகுலின் அதிரடி ஆட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 347 ஓட்டங்களை குவித்தது.

இந்திய அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 20 ஓட்டங்களையும், மயங்க் அகர்வால் 32 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் வந்த விராட் கோலி 51 ஓட்டங்களையும், ஸ்ரேஸ் அய்யர் 107 பந்துகளில் ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகள் அடங்கலாக 103 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

இதன் பின்னர் இறுதி வரை ஆட்டமிழக்காதிருந்த ராகுல் 64 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 88 ஓட்டங்களுடனும், கேதர் யாதவ் 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் டிம் சவுதி 2 விக்கெட்டுக்களையும், கிரேண்ட்ஹோம் மற்றும் இஷ் சோதி தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் நியூஸிலாந்து அணியின் வெற்றியிலக்குக்காக 348 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.