சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான பகுதியான வுஹானில் கைவிடப்பட்ட நிலையில் ஆயிரக் கணக்கான செல்லப்பிராணிகள் பசியால் வீதிகளில் சுற்றித் திரிவதாக அந்நாட்டு விலங்குகள் மீட்புக் குழுவினர் மற்றும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு மேலும் விலங்குகளினால் நோய்கள் பரவக்கூடுமென எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பிரதானமாக நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற விலங்குகள் வீதிகளில் அதிகளவில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக விலங்குகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான வுஹானில் இருந்து சுமார் 5 மில்லியன் மக்கள் தமது இருப்பிடத்தைவிட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் வீதிகளில் கைவிடப்பட்ட சுமார் 50,000 செல்லப்பிராணிகள் பசி , பட்டினியால் வீதிகளில் அலைந்து திரிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் இதுவரையில் 1000 செல்லப்பிராணிகளை பசி , பட்டினிகளில் இருந்து காப்பாற்றியுள்ளதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேவேளை சீனாவில் கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டு இதுவரை 492 பேர் உயிரிழந்துள்ளதோடு ,  24,552 பேர் குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.