வர­லாறு எம்­மீது சுமத்­தி­யுள்ள  பொறுப்­புக்­களை  நிறை­வேற்­று­வ­தற்­காக  ஒன்­று­சே­ரு­மாறு  அனைத்து இலங்­கைவாழ் மக்­க­ளுக்கும்  ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ  அழைப்பு விடுத்­தி­ருக்­கின்றார்.  

72ஆவது  சுதந்­தி­ர­தின  தேசிய வைபவம்  கொழும்பு சுதந்­திர சதுக்­கத்தில் நேற்றுக்காலை  இடம்­பெற்­றது.  இந்த நிகழ்வில் கலந்­து­கொண்டு  நாட்­டு­ மக்­க­ளுக்கு  உரை­யாற்­றி­ய­போதே   ஜனா­தி­பதி  இந்த  அழைப்­பினை விடுத்­தி­ருக்­கின்றார்.

எமக்கு பல சவால்கள்  இருக்­கின்­றன.  அதில் வெற்­றி­பெ­று­வ­தற்­காக  அர­சாங்கம் எடுக்கும்  முயற்­சி­க­ளுக்கு  உங்கள் அனை­வ­ரதும் ஆத­ரவு தேவை­யாகும்.   நான்   உங்கள் முன்­னி­லையில் வைத்த  கொள்­கைப் ­பிர­க­டனம்  இன்று நீங்கள் எதிர்­கொள்ளும் சவால்­களை எதிர்­கொள்ளக்­ கூ­டிய  செயல்­நெ­றி­யாகும்.  அதன்­வா­யி­லாக   சுபீட்­ச­மான  ஒரு தேசத்தை உரு­வாக்­கு­வது எமது எதிர்­பார்ப்­பாகும் என்றும்  ஜனா­தி­பதி   சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

சுதந்­தி­ர­தின உரை­யின்­போது  ஜனா­தி­பதி  கோத்­த­பாய ராஜ­பக் ஷ  பல்­வேறு யதார்த்­த­பூர்­வ­மான கருத்­துக்­களை  தெரி­வித்­தி­ருக்­கின்றார்.   இலங்­கை­யில் ­வாழும்  ஒவ்­வொரு பிர­ஜைக்கும் சுதந்­தி­ர­மா­கவும்   பாது­காப்­போடும்  வாழும்  உரிமை உண்டு.  அவர்கள் சுதந்­தி­ர­மாக சிந்­திக்கும் உரி­மையையும்  சுயா­தீ­ன­மாக  அபிப்­பி­ராயம் கொள்ளும்  உரி­மை ­போன்று கருத்­துக்­களை  தெரி­விக்கும் உரி­மை­யையும் நாம் உறு­தி ­செய்வோம். எந்­த­வொரு பிர­ஜைக்கும் தான்­ வி­ரும்பும் மதத்தை  வழி­படு­வ­தற்­காக உள்ள உரி­மையை நாம் எப்­பொ­ழுதும் மதிப்போம்.  தற்­போ­தைய அரச தலைவர் என்ற வகையில் எனது பத­விக்­கா­லத்­துக்குள் நாட்டின் அனை­வ­ரி­னதும் தலை­வ­ராக   நாட்டின்  நலன்­க­ருதி உச்­ச­க்கட்ட அர்ப்­ப­ணிப்­போடு   சேவை­யாற்ற நான் தயா­ரா­க­ உள்ளேன் என்றும் ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

ஜன­நா­ய­க ­ரீ­தி­யி­லான ஒரு நாட்டில்  தகுந்த மு­றை­மையின் கீழ் அரச தலைவர் ஒருவர்  நிய­மிக்­கப்­பட்­டதன்  பின் அவர் இந்த நாட்டின் அனைத்து மக்­க­ளி­னதும் ஜனா­தி­ப­தி­யாவார்.  அவர் தனது பத­விக்­ கா­லத்­தினுள்  முழு­மொத்த  இலங்கை மக்­க­ளுக்­கா­கவே சேவை­யாற்ற­ வேண்டும். அவர் தனக்கு வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு மட்டும்  சேவை­யாற்ற முடி­யாது.  ஒரு சமூ­கத்துக்கு சேவை புரியும்  அர­சி­யல் ­த­லைவர் அல்­லாது  அனைத்து மக்­க­ளி­னதும் அரச தலைவர்  என்ற வகையில் சேவை புரியும் நோக்கு எனக்­குள்­ளது.  

ஜனா­தி­ப­தி­யாக   இன, மத, கட்சி அல்­லது வேறு  எவ்­வி­த ­பே­தங்­க­ளு­மின்றி ஒட்­டு­மொத்த  இலங்கை மக்­க­ளையே நான்  இன்று  பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்றேன்.  எந்­த­வொரு ஜன­நா­யக ரீதி­யி­லான சமூ­கத்­திலும்   நன்­மைக்­கா­கவும் முன்­னேற்­றத்­துக்­காகவும் வலு­வான நிறை­வேற்­றுத்­ து­றையும் சட்­ட­வாக்­கத்­து­றையும்  அத்­துடன் தன்­னா­திக்­க­முள்ள நீதி­மன்­றமும்  தேவைப்­ப­டு­கின்­றது என்றும்  ஜனா­தி­பதி  தனது உரையில் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

எனது ஆட்­சிக்­கா­லத்தின் கீழ் எந்­த­வொரு  பிர­ஜைக்கும்  அநீதி விளை­யாத   தார்­மீ­க­மான அரச நிர்­வாக   முறை­மையை நடத்­து­வ­தற்கே   பெளத்த தத்­து­வத்­தின்­மூலம்  எமது ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு ஆலோ­சனை கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.  இன்று எமது மக்கள் சமூ­கத்­தினுள் இருப்­பவர், இல்­லா­தவர் எனும் பெரு­ம­ள­வி­லான ஏற்­றத்­தாழ்வு இருக்­கி­றது.  எல்­லாப் ­பி­ர­தே­சங்­க­ளிலும் கல்வி  வச­திகள் சம­நி­லையில் இல்லை. சுகா­தார வச­திகள், தொழில்­வாய்ப்­புகள் சம­நிலையில் இல்லை. இது­வொன்றும் இன­ரீ­தி­யா­கவோ மத­ரீ­தி­யா­கவோ   வலுப்­படும் நிலை­மைகள் அல்ல.  இவை நாட்டின் பொதுப்­பி­ரச்­சி­னை­க­ளாகும்.  வாழும் சுதந்­தி­ரத்தை  உறு­திப்­ப­டுத்­தும்­போது நாங்கள் முதன்­மு­த­லாக செய்­ய­வேண்­டி­யது மக்­களின் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தாகும்.  அதி­கா­ரப்­ப­ரவ­லாக்­க­லின்­போது மத்­திய அரசு மற்றும் பன்­முகப்­ப­டுத்­தப்­பட்ட பொறுப்­புக்­க­ளுக்­கி­டையே  சிறந்த ஒரு­மைப்­பாடு இருக்­க­வேண்டும் என்றும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

ஜனா­தி­ப­தியின் கருத்­தி­லி­ருந்து, நாட்டில்  மத சுதந்­திரம்  பாது­காக்­கப்­படும் என்றும் சகல மக்­க­ளுக்கும்  பார­பட்­ச­மின்றி   பொரு­ளாதார அபி­வி­ருத்தி   மேற்­கொள்­ளப்­படும் என்­பதை அவர்  உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளமை புல­னா­கின்­றது.  இத­னை­விட தனக்கு  வாக்­க­ளித்த மக்­க­ளுக்கும் வாக்­க­ளிக்­காத மக்­க­ளுக்கும் தான் ஜனா­தி­ப­தி­யாக சேவை­யாற்­றுவேன்  என்­ப­தையும்  அவர்   தற்­போதும் உறு­தி­படத் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில்  பெரும்­பான்­மை­யின மக்­களின்  பேரா­த­ர­வினைப் பெற்று ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாய  ராஜ­பக் ஷ தெரி­வு­செய்­யப்­பட்­டி­ருந்தார்.  சிறு­பான்மை மக்­களில் பெரும்­பான்­மை­யானோர்  கடந்த  ஜனா­தி­பதித் தேர்­தலில் அவரை ஆத­ரிக்­க­வில்லை. இந்த நிலையில், அவர்  ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­ற­போதும்  சிறு­பான்மை மக்கள் தனக்கு  ஆத­ரவு வழங்­கா­விட்­டாலும் சக­ல­ருக்கும்  ஜனா­தி­ப­தி­யாக சேவை­யாற்­றுவேன் என்று  உறு­தி­ வ­ழங்­கி­யி­ருந்தார்.  அதே­போன்றே தற்­போது மீண்­டு­மொ­ரு­முறை தேசிய சுதந்­திர தின நிகழ்­விலும் ஜனா­தி­பதி  இந்த உறு­திப்­பாட்டை வெளிப்­படுத்­தி­யி­ருக்­கிறார்.

ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர்  சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு   எதி­ரான செயற்­பா­டுகள்  தலை­தூக்கும் என்ற  அச்சம்    மேலெ­ழுந்­தி­ருந்­தது.  சிறு­பான்­மை­யின மக்கள் மத்­தியில் ஏற்­பட்­டி­ருந்த அத்­த­கைய அச்­சத்தைப் போக்கும் வகை­யி­லேயே  ஜனா­தி­ப­தியின் இத்­த­கைய   கருத்­துக்கள் அமைந்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்கன.

ஆனாலும் ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாய ராஜ­பக் ஷ பத­வி­யேற்­றதன் பின்னர் பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் தலை­மையில் இடைக்­கால அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டது. ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர்  சிங்­கள பெளத்த தேசியவாதத்­துக்கு  முன்­னு­ரிமை   அளிக்கும் செயற்­பா­டுகள்  இடம்­பெற்று வரு­வ­தாக  குற்­றச்­சாட்­டுக்கள்  எழுந்­துள்­ளன.  பெளத்­தத்­துக்கே முன்­னு­ரிமை என்றும்  வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.  இத்­த­கைய செயற்­பா­டுகள்  சிறு­பான்­மை­யின மக்கள் மத்­தியில் அதி­ருப்­தி­யையும்  அச்­சத்­தையும் ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன.

இந்த நிலை­யில்தான் நாட்டின் எந்­த­வொரு பிர­ஜையும் எந்­த­வொரு மதத்­தையும் பின்­பற்­று­வ­தற்­கான சுதந்­திரம்  உண்டு என்றும்  அதற்­காக அர­சாங்கம் பாடு­படும் என்றும்  ஜனா­தி­பதி தனது உரையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

சிறு­பான்­மை­யின மற்றும் மதங்கள் மத்­தியில்  பெளத்த சிங்­கள மேலா­திக்­க­வாதம்  ஏற்­பட்­டு­வி­டுமோ என்று அச்சம் நில­வி­வந்த நேரத்தில் ஜனா­தி­ப­தியின் இந்த நிலைப்­பா­டா­னது   சற்று ஆறுதல் அளிப்­ப­தா­கவே உள்­ளது.  

தற்­போ­தைய அர­சாங்­கத்தின்  செயற்­பா­டுகள் தொடர்பில்  சர்­வ­தேச அமைப்­புகள்  குற்­றச்­சாட்­டு­களை தெரி­வித்து வரு­கின்­றன.  சர்­வ­தேச நெருக்­கடி குழுவில் முன்­கூட்­டியே எச்­ச­ரிக்கும் அவ­தா­னிப்புப் பட்­டி­யலில்  இலங்கை மோதல் நெருக்­க­டி­யி­லுள்ள  அல்­லது வன்­செயல் அதி­க­ரிக்கும் ஒரு நாடாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.  இந்த அமைப்­பினால் வெளி­யி­டப்­பட்ட இலங்கை தொடர்­பி­லான அறிக்­கைக்கு இலங்­கையின் அபா­ய­க­ர­மான பாரிய மாற்றம்  என்று தலைப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்றது.

எதிர்­கா­லத்தில் நாட்டில் சமா­தா­னமும் ஐக்­கி­யமும் சீர்­கு­லை­யக்­கூ­டிய ஆபத்­தான நிலை­மைகள் உள்­ள­தாக  இந்த அறிக்­கையில் எச்­ச­ரிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆசிய பிராந்­தி­யத்­தி­லேயே  இலங்கை மட்­டுமே இத்­த­கைய நிலை­மைக்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்­றது.

இலங்­கையில் முஸ்­லிம்கள் உட்­பட  சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான  செயற்­பா­டு­களை  அடிப்­ப­டை­யாக கொண்டே இந்த அமைப்­பா­னது இத்­த­கைய அறிக்­கையை விடுத்­தி­ருக்­கின்­றது. எனவே இவ்­வா­றான சூழ்­நிலைகள் தொடர்பில்  அர­சாங்கம்  கவனம் செலுத்­த­வேண்­டிய நிலைமை தற்­போது  ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

தேசிய சுதந்­தி­ர­தின நிகழ்வில் இம்­முறை  சிங்­க­ளத்தில் மட்­டுமே தேசிய கீதம்  பாடப்­பட்­டது.  நல்­லாட்சி அர­சாங்க காலத்தில் இடம்­பெற்ற  தேசிய சுதந்­திர தின நிகழ்­வு­களில் இரு­மொ­ழி­க­ளிலும் பாடப்­பட்ட தேசிய கீதம் தற்­போது   ஒரு­மொ­ழி­யி­லேயே பாடப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த விவ­கா­ர­மா­னது  தமிழ்  பேசும் மக்கள் மத்­தியில் நிச்­ச­ய­மாக பெரும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. சிறு­பான்­மை­யின   மக்­களின் மனங்­களை வெல்­ல­வேண்­டு­மானால்  இத்­த­கைய   சிறிய விட­யங்­க­ளை­யா­வது அர­சாங்கம் நடை­மு­றைப்­ப­டுத்­த ­வேண்டும்.  ஆனால்  திட்­ட­மிட்­ட ­வ­கையில்  சிறு­பான்மை மக்­களை ஒதுக்கும் விதத்­தி­லேயே இத்­த­கைய செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக குற்றம் சாட்டப்படுகின்றது.

இவ்வாறான நிலையில்  ஜனாதிபதி  அழைப்பு விடுத்துள்ளதைப் போன்று  வரலாறு சுமத்தியுள்ள  பொறுப்பை  ஒன்றுபட்டு   நிறைவேற்ற வேண்டுமானால்,  சிறுபான்மையின மக்களின் மனங்களை   அரசாங்கம்  வெல்லவேண்டியது அவசியமாக உள்ளது.  அதற்கான நடவடிக்கைகள்  எதிர்காலத்திலாவது எடுக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி தெரிவித்துள்ளதைப் போன்று பொதுவான பிரச்சினை­களைத்  தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன்  சிறுபான்மை­­­­­யின மக்களின் பிரத்தியேகமான அவர்களுக்கே உரிய பிரச்சினை களுக்கும்  தீர்வுகாண  அரசாங்கம்  முன்வரவேண்டும். வெறுமனே  பெரும்பான்மையின மக்களை மட்டும் திருப்திப்படுத்தும் செயற்பாடு களை மேற்கொள்வதை விடுத்து ஜனாதிபதி  தெரிவித்ததைப் போன்று  சிறுபான்மையின மக்களுக்கும் இன, மத வேறுபாடின்றி  சேவையாற்ற  அரசாங்கம் முன்வரவேண்டும்.  இனியும் சிறுபான்மை மக்கள் புறக்கணிக்கப்படுவார்களாக இருந்தால்  நல்லிணக்கம் என்பது  ஒருபோதும் சாத்தியமாகாது என்பதுடன்  ஜனாதிபதியின்  வரலாற்றுப் பொறுப்பை நிறைவேற்றும் செயற்றிட்டத்தையும் முன்னெடுக்க முடியாது என்பதை  சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

(05.02.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )