(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகத்தில், சீனாவிலிருந்து நாடு திரும்பிய மூன்று இலங்கையர்கள் அங்கொடை தொற்று நோய் தடுப்பு (ஐ.டி.எச்) வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

நேற்று அவர்கள் இவ்வாறு அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வந்ததாகவும் அவர்களுக்கு அந்த தொற்று இருப்பது இதுவரை உறுதி செய்யப்படாத போதும் தொடர்ந்து பரிசோதனைகளை முன்னெடுத்து வருவதாக குறித்த வைத்தியசாலையின் தொற்று நோய் குறித்த சிரேஷ்ட வைத்திய நிபுணர் தெரிவித்தார். 

அத்துடன் இதுவரை இலங்கையில்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒரே ஒருவரே கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த சீனப் பெண்ணுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு அவர் தற்போது குணமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

எவ்வாறாயினும், குறித்த சீன பெண், தொடர்பில் சில பரிசோதனைகளின் முடிவு நாளை பெரும்பாலும் கிடைக்கவுள்ளதாகவும், சீனப் பெண்ணை வைத்தியசாலையிலிருந்து வெளியேற அனுமதிப்பது குறித்த தீர்மானத்தை சிகிச்சையளித்த வைத்தியர்களும், தொற்று நோய் குறித்த விஷேட வைத்திய நிபுணர்களும் இணைந்து பேசி முடிவெடுப்பர் எனவும் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் லக்ஷ்மன் கம்பல்த் தெரிவித்தார்.

கொரோனா வைரஸின் பூர்வீகமாக கருத்ப்படும் சீனாவின் வுஹான் பிராந்தியத்திலிருந்து அழைத்து வரப்பட்ட 33 இலங்கையர்கள் நேற்று நான்காவது நாளாகவும், தியதலாவை இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள விஷேட  தொற்று நோய் கண்காணிப்பு மையத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

எனினும் இன்று மாலை வரை அவர்களுக்கு கொரோனா தாக்கம் உள்ளமை தொடர்பில் சந்தேகிக்கும் படியான எந்த அறிகுறிகளும்  கண்டறியபப்டவில்லை என பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் லக்ஷ்மன் கம்பல்த் மேலும் தெரிவித்தார். 

அதனால் பெரும்பாலானோர் அடுத்து வரும் 10 நாட்களில் குறித்த 33 பேரையும் அவர்களது குடும்பத்தாருடன் சேர்க்க முடியுமாக இருக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே சுமார் 2000 பயணிகளுடன் விஷேட பயணிகள் கப்பலொன்று  பெரும்பாலும் நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக கூற்ப்படுகின்ரது. அதனால் அக்கப்பலில் வரும் பயணிகளில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களாக இருப்பின் அதனூடாக நாட்டுக்குள் அத்தொற்று ஏற்படலாம் என  அச்சம் தெரிவிக்கபப்டும் நிலையில் அது குறித்தும் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.