திரு­கோ­ண­மலை நக­ர­ச­பை­யினால்  நேற்று முன்­தினம் திறக்­கப்­பட்ட ஞாயிறு வாராந்த சந்தை  பெரும்­பான்­மை­யி­னரின்  எதிர்ப்பு கார­ண­மாக  கிழக்கு மாகாண ஆளுநர் அநு­ராத ஜஹம்­பத்தின்  உத்­த­ர­வுக்­க­மைய  மூடப்­பட்­டுள்­ளது.  

திரு­மலை  நக­ர­ச­பைக்கு சொந்­த­மான  மின்­சார நிலைய வீதியில்  அமைந்­துள்ள   மறைந்த  நக­ர­சபைத் தலைவர்    சூரி­ய­மூர்த்­தி­யினால் கட்­டப்­பட்ட   ஐக்­கிய  பொது­ச்சந்தை கட்­ட­டத்தில்   நேற்று முன்­தினம்  ஆரம்­பிக்­கப்­பட்ட   வாராந்த   சந்­தையே இவ்­வாறு  மூடப்­படும் நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கி­றது. 

பொது­ச்சந்­தை­யி­லுள்ள பெரும்­பான்­மை­யின  வியா­பா­ரி­களின்  ஆர்ப்­பாட்டம் கார­ண­மா­கவும்  ஆளு­நரின்   உத்­த­ர­வுக்­க­மை­யவும்  ஆரம்­பிக்­கப்­பட்ட ஞாயிறு சந்தை  மூடப்­பட்­டி­ருக்­கின்­றது.  திரு­மலை நக­ர­ச­பையின்  24 உறுப்­பி­னர்­களின்  ஒப்­பு­த­லுடன்  உரிய சட்­ட­வி­தி­மு­றை­க­ளுக்கு அமை­வாக  இந்த  சந்தை  ஆரம்­பிக்­கப்­பட்­டது. 

திரு­ம­லையில் வாழும் வறிய மக்­களின் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்தும் நோக்கிலும்  தமது   சொந்த உற்­பத்­தி­க­ளுக்­கான  சந்­தை­வாய்ப்பை  பெற்­றுக்­கொ­டுக்கும் நோக்கிலும் அவர்­களின் வாழ்­வா­தா­ரத்­துக்கு   உந்து சக்­தி­யாக  இந்த  வாராந்த சந்தை  அமையும் என்ற அடிப்­ப­டையில்   இன, மத  பேதங்­க­ளற்­ற­ வ­கையில்  எல்லா மக்­களும்   பயன்­பெறும் வகையில்   நக­ர­ச­பையில் அங்கம் வகிக்கும்  சிங்­கள, தமிழ், முஸ்லிம் உறுப்­பி­னர்­களின் ஒப்­பு­த­லுடன்   இந்த நட­வ­டிக்கை  மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. 

ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 7 மணி­ய­ளவில்  நக­ர­ச­பையின்  தலைவர்  இரா­ச­நா­யகம்  தலை­மையில்  இந்த சந்தை  திறக்­கப்­பட்­டது. இதன்­போது  100க்கும் மேற்­பட்ட வியா­பா­ரிகள் இங்கு வியா­பாரம் செய்­வ­தற்கு தயா­ராக வந்­தி­ருந்­த­போ­திலும்,  34 பேருக்கு  வியா­பாரம் செய்­வ­தற்கு   அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது.  இவ்­வாறு  வியா­பாரம்  இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்த வேளை­யி­லேயே  பொதுச்­சந்தையை  சேர்ந்த   பெரும்­பான்­மை­யின  வியா­பா­ரிகள் மற்றும்  பெரும்­பான்­மை­யினர்   சந்­தையை  மூடு­மாறு கோரி  ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.  

இத­னை­ய­டுத்து, இப்­ப­கு­தியில்  பெரும்  பதற்­ற­நி­லைமை ஏற்­பட்­டது.  பொலிஸார்  குவிக்­கப்­பட்­ட­துடன்  ஆர்ப்­பாட்­டத்தை அடுத்து, வாராந்த சந்­தையை   தற்­கா­லி­க­மாக  மூடு­மாறு  கிழக்கு மாகாண ஆளுநர்   அநு­ராத ஜஹ­கம்பத்  நக­ர­ச­பையின் தலை­வ­ருக்கு தொலை­பே­சியில்  அறி­வித்­துள்ளார். 

ஆனாலும் இதற்­கான உத்­த­ரவு தனக்கு எழுத்­து­மூலம் வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்று நக­ர­சபைத்  தலைவர் என். ராஜ­நா­யகம் கோரி­ய­தை­யடுத்து, ஆளு­நரின் செய­லா­ளரின் கையொப்­பத்­துடன் இதற்­கான கடிதம் அனுப்­பி ­வைக்­கப்­பட்­டுள்­ளது. 

ஆர்ப்­பாட்­டத்தை அடுத்து, திரு­கோ­ண­மலை மாவட்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிர­சன்ன  பிரக்மன்  தலை­மை­யி­லான  குழு­வினர்   ஸ்தலத்துக்கு விரைந்­த­துடன்  ஆளு­நரின் கட்­ட­ளைக்­க­மைய  வாராந்த சந்­தையை மூடி­வி­டும்­படி பணித்­த­துடன் அங்­கி­ருந்த வியா­பா­ரி­களை  வெளி­யே­றும்­படியும் கட்­ட­ளை  ­பி­றப்­பித்­தனர்.  இத­னை­ய­டுத்து  அங்கு வியா­பாரம் செய்த வியா­பா­ரிகள்  மூட்டை முடிச்­சுக்­க­ளுடன் அவ­சர  அவ­ச­ர­மாக வெளி­யேற்­றப்­பட்­டார்கள்.

திரு­கோ­ண­மலை மின்­சார நிலைய வீதியில் 1997 ஆம் ஆண்டு  திரு­கோ­ண­மலை  நக­ர­சபைத் தலை­வ­ராக இருந்த  மறைந்த  பெ.சூரிய­மூர்த்­தி­யினால் இந்த  ஐக்­கிய பொது­ச்சந்தை கட்­டடம்  அமைக்­கப்­பட்­டி­ருந்­தது.   அன்­றைய காலப்­ப­கு­தியில் திரு­கோ­ண­மலை பொதுச்­சந்­தையில்  தமிழ் பேசும்  வியா­பா­ரி­க­ளுக்கு  உரிய வச­திகள்  இன்மை கார­ண­மா­கவும்   தமிழ் வியா­பா­ரி­க­ளுக்கு உரிய வகையில்  இட­ம­ளிப்­ப­தற்­கா­கவும் இந்த பொது­ச்சந்தை கட்­டடம் அமைக்­கப்­பட்­டது.  அன்று பெரும் எதிர்ப்­பு­க­ளுக்கு மத்­தி­யி­லேயே இந்த கட்­டடத் தொகுதி அமைக்­கப்­பட்­டி­ருந்­தது. அதனை திறந்து வைப்­ப­தற்கு  அப்­போது முயன்ற போது   பல்­வேறு கார­ணங்­க­ளினால்  அதற்கு தடைகள் போடப்­பட்­டன. 

பெரும்­பான்­மை­யினர் இந்த சந்­தைக்­கட்­டடத் தொகு­தி­யினை  திறப்­ப­தற்கு  கடும் எதிர்ப்­புக்­களை தெரி­வித்­தி­ருந்­தனர்.  பொதுச்சந்தை வியா­பா­ரி­க­ளுக்கு  பாதகம் ஏற்­படும்  என்று கருதி  பெரும்­பான்­மை­யினர் அன்றும்   இந்த கட்­டடத் தொகு­தியை திறப்­ப­தற்கு எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்­தனர்.    ஐக்­கிய பொதுச்­சந்தை கட்­டடத் தொகுதி திறப்­ப­தற்கு ஆயத்­தங்கள்  இடம்­பெற்­ற­தை­ய­டுத்து, அதனைத் தடுப்­ப­தற்கு இரா­ணு­வத்­தினர் பயன்­ப­டுத்­தப்­பட்­டனர்.  இந்த விடயம் அன்று  பெரும் சர்ச்­சையை கிளப்­பி­யி­ருந்­தது. 

இதன்­பின்னர் இந்த சந்­தைக்­கட்­டடத் தொகுதி   இரா­ணுவ வச­மா­னது. இதில் இரா­ணு­வத்­தினர்  தங்­க­வைக்­கப்­பட்­டனர்.   இரா­ணுவ முகா­மா­கவே இது   2017ஆம் ஆண்­டு­வரை   செயற்­பட்­டி­ருந்­தது.   2015ஆம் ஆண்டு மைத்­தி­ரி­பால சிறி­சேன  ஜனா­தி­ப­தி­யாக   தெரிவு செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து, நல்­லாட்சி அர­சாங்கம்   பத­வி­யேற்­றது.  இதன் பின்னர் 2017ஆம் ஆண்டு  இந்த  சந்­தை ­கட்­டடத் தொகு­தி­யி­லி­ருந்து  இரா­ணு­வத்­தினர் வெளி­யே­றி­யி­ருந்­தனர். அதன் பின்னர்  இதனை திருகோ­ண­மலை நக­ர­சபை பொறுப்­பேற்­றி­ருந்­தது. 

இவ்­வாறு பொறுப்­பேற்­கப்­பட்ட  ஐக்­கிய பொதுச்சந்­தை ­கட்­ட­டத்தை  எத்­த­கைய தேவைக்கு பயன்­ப­டுத்­து­வது என்­பது குறித்து  கலந்­து­ரை­யா­டல்கள் நடை­பெற்­றி­ருந்­தன.   திரு­மலை சண்­மு­கா­ வித்­தி­யா­லயம்  இந்த  கட்ட­டத் ­தொ­கு­தியை தமது தேவைக்கு வழங்­கு­மாறு கோரி­யி­ருந்­தது. இதே­போன்று  சாஹிரா கல்­லூ­ரியும் கோரி­யி­ருந்­த­தாக தெரி­கின்­றது. இவ்­வா­றான நிலை­யில்தான் நக­ர­ச­பையில் ஏக­ம­ன­தாக தீர்­மானம் எடுக்­கப்­பட்டு   வாராந்த ஞாயிறு  சந்­தையை   திறப்­ப­தற்கு   நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. 

இந்த விடயம் தொடர்பில்  கிழக்கு மாகாண ஆளுநர்  அநு­ராதா  ஜஹ­கம்­பத்­துடன் நக­ர­சபைத் தலைவர் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.  பொது­ஜன பெர­மு­னவை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் திரு­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னரும் அமைச்­ச­ரு­மான சுசந்த புஞ்­சி­நி­ல­மே­யு­டனும்  கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது.  இத­னை­விட கிழக்கு மாகாண பிர­தம  செய­லாளர், உள்­ளூ­ராட்சி ஆணை­யாளர்,  உள்­ளூ­ராட்சி உதவி ஆணை­யாளர்,   பொலிஸ்  அதி­கா­ரிகள் அனை­வ­ருக்கும் இந்த விடயம் தொடர்பில்  நக­ர­ச­பைத் தலைவர்  நேர­டி­யாக சென்று  விளக்­கி­யி­ருந்தார். 

இத­னை­விட  மடத்­தடி விகா­ரையின் விகா­ர­தி­ப­திக்கும் விளக்கம் அளிக்­கப்­பட்­டி­ருந்­தது. அனை­வரும் இந்த முயற்­சிக்கு ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்­தனர்.   ஆளுநர்  இந்த நட­வ­டிக்­கைக்கு தனது பூரண வர­வேற்பை   தெரி­வித்தும் இருந்தார்.  இவ்­வாறு அனை­வ­ரது ஒத்­து­ழைப்­பையும் பெற்று ஞாயிறு சந்தை   திறக்­கப்­பட்­டி­ருந்­தது.  1997 ஆம் ஆண்டு அமைக்­கப்­பட்ட ஐக்­கிய பொதுச்­சந்தை  கட்­ட­ட­மா­னது  23 வரு­டங்­க­ளுக்கு பின்னர் செயற்­பட ஆரம்­பித்­தி­ருந்­தது. 

ஆனால்,  வாராந்த சந்தை  திறக்­கப்­பட்டு ஒரு மணி­நே­ரத்தில்   அந்த சந்­தையை  இழுத்­து­மூ­ட­வேண்­டிய நிலைமை  ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. யுத்தம் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில்  திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில்   பெரும் முறுகல் நிலைமை  நில­வி­வந்­தது.  பாது­காப்­புக்கும்  அச்­சு­றுத்­த­லான நிலைமை காணப்­பட்­டது.  அந்­த­வே­ளையில் பெரும்­பான்­மை­யி­னரின் எதிர்ப்பு கார­ண­மாக   ஐக்­கிய  பொதுச்­சந்தை கட்­டடம் திறக்க முடி­யாத நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. 

ஆனால், தற்­போது  திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில்  எந்­த­வித அச்­சு­றுத்­தலும் இல்லை. நக­ர­ச­பையின் சகல உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வுடனும் சக­லரின் ஒத்­து­ழைப்­பையும் பெற்று  அமைக்­கப்­பட்ட   இந்த   ஞாயிறு சந்­தை­யா­னது, பெரும்­பான்­மை­யி­ன­ரது எதிர்ப்பை அடுத்து  மூடப்­பட்­டமை  திரு­கோ­ண­மலை வாழ் தமிழ் பேசும் மக்­களைப் பொறுத்­த­வரையில்  பெரும் கவ­லை­ய­ளிக்கும் விட­ய­மா­கவே மாறி­யி­ருக்­கி­றது. 

ஞாயிறு சந்­தையை திறப்­ப­தற்கு  அனு­மதி அளித்த   கிழக்கு மாகாண ஆளுநர், எதிர்ப்பை கண்டு  தனது நிலைப்­பாட்டை  மாற்­றி­யுள்­ளமை  ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க செயற்­பாடு அல்ல.  திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில்  மக்கள் மத்­தியில்  நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டு­மானால், சகல இன மக்­களும்  சமத்­து­வ­மாக  வாழும் நிலைமை   உரு­வாக்­கப்­ப­ட வேண்டும்.  புதி­தாக பத­வி­யேற்­றுள்ள கிழக்கு மாகாண ஆளுநர்  சகல இன மக்­க­ளையும் சமமாக நடத்தவேண்டும்.   

தற்போதைய நிலையில்,  அனுமதிக்கப்பட்ட   ஞாயிறு  சந்தையை  மீளவும்  திறப்பதற்கு   ஆளுநர்  நடவடிக்கை எடுக்கவேண்டும்.  இந்த விடயத்தில்  சகல தரப்பினரையும்  அழைத்து  ஆளுநர்  கலந்துரையாடவேண்டும். மத்திய சந்தை வியாபாரிகளுக்கு உள்ள  அச்ச நிலைமை தொடர்பில் கலந்துரையாடி அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். 

இந்த விடயத்தில்  தமிழ் அரசியல் தலைமைகளும்  தமது நிலைப்பாட்டில்  உறுதியாக இருக்க வேண்டும். திருகோணமலை நகரசபைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின்  கோரிக்கைகளுக்கு   தமிழ்த்  தலைமைகள்  பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும். இந்த விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள்  அரசியல் சுயநலன்களை பாராது   இதனை   தமிழ் பேசும் மக்களின் பொதுவான  பிரச்சினையாக கருதி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.  திருகோணமலையில் சகல மக்களும் ஒன்றிணைந்து  ஒற்றுமையாக வாழவேண்டுமானால்,   ஆளுநர்   இந்த விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

( 04.02.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )