(ஆர்.விதுஷா) 

குவைத்திற்கு தொழில் நிமித்தம் சென்று அங்கு பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான  இலங்கை பணிப்பெண்கள் 58 பேர்   நாடு  திரும்பியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்   தெரிவித்துள்ளது. 

அவர்கள் அனைவரும் இன்று காலை 6.20 மணியளவில்   யூ.எல்  230   விமான சேவையூடாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை  வந்தடைந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது  முகாமையாளர் ஜெகத் படுகெதர தெரிவித்தார். 

பணிப்பெண்கள்  குவைத்நாட்டில் தொழில் புரிந்த சந்தர்ப்பத்தில் வீட்டு உரிமையாளர்களினால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இந்நிலையில் அங்கிருந்து தப்பி சென்றதையடுத்து அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

அதனையடுத்து அவர்கள் அனைவரும் குவைட் நாட்டிற்கான  இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், பாதுகாப்பு தடுப்பு  முகாமில் வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவருக்கும்  தற்காலிக பயண ஆவணங்கள் வழங்கப்பட்டதுடன், நாட்டிற்கு  அனுப்பி  வைக்கப்பட்டனர். 

அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவர் சுகவீனமடைந்திருந்தமையினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுகாதார பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  

இவர்களில் அதிகமானோர் தமது பணத்தை செலுத்தி விமான சீட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளதுடன், சிலருக்கு மாத்திரம் காப்புறுதி நிறுவனமொன்றின் உதவியுடன் விமான சீட்டுகளுக்கான  கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. 

இந்த பணிப்பெண்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அழைத்து செல்லப்பட்டதுடன், அவர்களுக்கான  ஏனைய நிதி வசதிகள் மற்றும் போக்குவரத்து வரதிகளை ஏற்படுத்தி கொடுக்கும்  நடவடிக்கைகளை  பணியகம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.