பெருந்தோட்டத் தொழிலாளர்களின்உரிமைகளை வலியுறுத்தி சுதந்திர தினத்தில் ஆர்ப்பாட்டம் 

By R. Kalaichelvan

04 Feb, 2020 | 01:10 PM
image

(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம், காணி உரிமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தி சுதந்திர தினமான இன்று கொழும்பு - புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தோட்ட தொழிலாளர் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை சோசலிச கட்சி, 1000 ரூபா அமைப்பு, மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் என்பன கலந்து கொண்டன. 

பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த சம்பளம் வழங்குவதாக அரசாங்கம் அந்த மக்களை ஏமாற்றுவதாகவும், தற்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமைகளும் பறிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். இவ்வாறான நிலைமையில் பெருந்தோட்ட மக்கள் எவ்வாறு சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கேள்வியெழுப்பினர். 

இதன் போது ' வெள்ளையனோ துடைத்தெடுத்தான் , இன்றிவனோ இடுப்பொடித்தான் ' , ' காணி இல்லை - வீடு இல்லை - உண்டு வாழ ஊதியம் இல்லை - தோட்ட வாழ்வில் ஒன்றுமில்லை - வீதி வந்தோம் நாங்கள் இன்று ' , ' இடம் கொடு - வீடுகொடு - சிவிலுரிமை எமக்கு கொடு - நூற்றாண்டு அடிமை வாழ்வு போதும் போதும் உடன் நிறுத்து ' , தேர்தல் வரும் - வந்த தேர்தல் அதுவும் போகும் - சொகுசு வாழ்வு அவர்களுக்கு - சோக வாழ்வு எங்களுக்கு ' , ' மைத்திரி ரணில் சொன்ன கதை - மஹிந்த கோத்தா சொல்கிறார்கள் , பொய் பிரட்டு இனி வேண்டாம் - ஆயிரத்தை எமக்கு கொடு ' போன்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பினை வெளியிட்டனர். 

இதே போன்று ' தருவதாய் கூறிய 1000 ரூபாவை பொதுத் தேர்தலுக்கு முன்னர் கொடு ' , ' தோட்டத் தொழிலாளர்களின் நாட் கூலி 1000 ரூபா என்பதை சட்டமாக்கு ' , ' சிவில் உரிமை இல்லை - வாழ்வதற்கு ஊதியம் இல்லை - தோட்டத் தொழிலாளர்களுக்கு எங்கே சுதந்திரம் ' என்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு சுமார் நூறு பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right