ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  32 ஆவது கூட்டத் தொடர்  இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. இந்தக் கூட்டத் தொடரில்  அரசாங்கத்தின் சார்பில் கலந்துகொள்ளவுள்ள  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர  உள்ளக விசாரணை பொறிமுறையின்  தற்போதைய நிலைமை மற்றும்  அதன் நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் 29 ஆம் திகதியே உரையாற்றவுள்ளார்.    

அந்தவகையில் எதிர்வரும் 28 ஆம் திகதி  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவா பயணமாகவுள்ளார்.  அத்துடன் இம்முறை  ஜெனிவாக் கூட்டத்தொடரில்  நல்லிணக்க செயலகத்தின் செயலாளர் மனோ தித்தவலவும் இலங்கையின் சார்பில் கலந்துகொள்ளவுள்ளார். 

இம்முறை ஜெனிவாக் கூட்டத் தொடரானது  இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகின்றது. காரணம்  ஜூன் மாதம் 29 ஆம் திகதி இலங்கை  தொடர்பான வாய்மூல அறிக்கை   ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்  செய்ட் அல் ஹுசெனினால்  சமர்ப்பிக்கப்படவுள்ளது.   அந்த அறிக்கையில் நாட்டின் மனித உரிமை நிலைமை  தொடர்பாக   தான் மேற்கொண்ட மதிப்பீடு மற்றும்  அரசாங்கத்தின் நல்லிணக்க வேலைத்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கவுள்ளார். 

அதன்படி   ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனின் வாய்மூல அறிக்கைக்கு பதிலளித்தே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் உரையாற்றவுள்ளார்.   இது இவ்வாறு இருக்க இன்றைய தினம்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  32 ஆவது  கூட்டத் தொடரின் முதல்நாள் அமர்வில் உரையாற்றவுள்ள செய்ட் அல் ஹுசேன்  இலங்கை தொடர்பில் பிரஸ்தாபிப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.    அவரின் உரைக்கு  ஜெனிவாவில் உள்ள இலங்கையின் வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க   பதிலளித்து உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

அத்துடன்    இன்றைய முதல்நாள் அமர்வில் பல்வேறு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும்    இலங்கை  தொடர்பில்  கருத்துக்களை  தெரிவிப்பதுடன் கேள்விகளை எழுப்பலாம் என்று கூறப்படுகின்றது.  ஆனால்   அவற்றுக்கும் ரவிநாத ஆரியசி்ஙக பதிலளிக்கவுள்ளார்.  

இதேவேளை மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணையில் எக்காரணம் கொண்டும் வெ ளிநாட்டு நீதிபதிகள் உள்வாங்கப்படமாட்டார்கள் என்றும் உள்நாட்டு நீதிபதிகளை  கொண்டே விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதமர்   ரணில் விக்ரமசிங்க அண்மையில்  அறிவித்திருந்தார்.  

இதேவேளை   சர்வதேச நீதிபதிகளை எக்காரணம் கொண்டும் உள்ளக விசாரணை பொறிமுறையில் இணைத்துக்கொள்ளமாட்டோம் என்றும் உள்ளக   நீதிபதிகளைக்கொண்டு  விசாரணை முன்னெடுக்கப்படும் என்றும்   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் வலுவான  முறையில் குறிப்பிட்டிருந்தார். 

அந்தவகையில்  அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால்   ஜெனிவாவில் முன்வைக்கப்படும் என்றும்  எதிர்பார்க்கப்படுகின்றது.   

இந்தக் கூட்டத் தொடரில் அரசாங்கத்தின் சார்பிலும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும்  கலந்துகொள்ளவுள்ள பிரதிநிதிகள்  மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனை சந்தித்துப் பேச்சு  நடத்தவுள்ளனர். 

இரண்டு தரப்பினருமே  ஜெனிவா பிரேரணையின் அமுலாக்கம்  தொடர்பிலேயே  செய்ட் அல் ஹுசெனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.   குறிப்பாக  அரசாங்க தரப்பினர் தாம்  சிறந்த முறையில் ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்திவருவதாக    ஐக்கிய  நாடுகள் மனித உரிமை ஆணையாளரிடம் தெரிவிக்கவுள்ளனர். 

ஆனால்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது  ஜெனிவா பிரேரணையின் அமுலாக்கம்  தொடர்பில்  குறிப்பிடத்தக்களவு அதிருப்தியை  வெளிக்காட்டும் என  எதிர்பார்க்கப்படுகின்றது. 

இது இவ்வாறு இருக்க கடந்த  பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம்  மேற்கொண்டிருந்த செயிட் அல் ஹுசைன்   வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பில் முடிவெடுப்பது இலங்கையினுடைய  தீர்மானமாகும் என்று  வலியுறுத்தியிருந்தார்.    

அத்துடன் இம்மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் விசெட  அறிக்கையாளர்கள் இருவரும்  தமது அறிக்கையை   மனித உரிமை ஆணையாளரிடம்  தமது  ஆரம்ப அறிக்கையை  சமர்ப்பிக்கவுள்ளனர். ஆனால் தமது   இறுதி அறிக்கையை  34 ஆவது அமர்விலேயே    இந்த இரண்டு பிரதிநிதிகளும் தாக்கல் செய்யவுள்ளனர்.  

சுயாதீன நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பான விடேச அறிக்கையாளர் மொனிக்கா பின்டோவும், சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் ஜுவான் மென்டேஸுமே இலங்கைக்கு கடந்த மாதம் 29 ஆம் திகதி வருகை தந்தனர்.