(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான சீனப் பெண் நாளை அல்லது நாளைமறுதினம் வீடு செல்ல அனுமதிக்கப்படலாம் என அவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.  

குறித்த சீனப் பெண்ணின் உடலில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது  தெரியவந்துள்ள நிலையில், இவ்வாறு அவரை வைத்தியசாலையிலிருந்து  சிகிச்சைகளை முடித்துக்கொண்டு திரும்ப அனுமதிப்பது தொடர்பில் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை ஆராய்ந்து வருவதாக வைத்தயர்கள் கூறினர். 

அது தொடர்பில் செயற்பட,  சிகிச்சை பெற்று வரும் குறித்த சீன பெண்ணின் உயிரியல் மாதிரிகள் தேசிய மருத்துவ ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதன் முடிவுகளுக்கு அமைய குறித்த பெண்ணை வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் லக்‌ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும்  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட  குறித்த சீனப் பெண் தொடர்பிலும் தொடர்ந்தும் அவதானத்துடன் உள்ளதாக தேசிய தொற்றுநோய் வைத்தியசாலை குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படும் மேலும் சில நோயாளர்கள் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.