முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் கிராமிய ஆரம்ப  வைத்தியநிலையத்தில் வைத்தியரை நியமிக்க கோரி மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை (03)இன்று  காலை நடத்தியுள்ளார்கள்.

தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தில் நாள்தோறும் ஐம்பதிற்கு மேற்பட்ட நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

ஐனவரி மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை வைத்தியர்கள் எவரும் இல்லாத நிலை தொடர்ந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

வள்ளிபுனம்,தேவிபுரம், வெள்ளப்பள்ளம், சுதந்திரபுரம், இருட்டுமடு, இடைக்கட்டு, போன் கிராமங்களை சேர்ந்த இரண்டாயிரம் குடும்பங்கள் இந்த வைத்தியசாலையினை நம்பியே வாழ்ந்து வருகின்றார்கள்.

இங்கு வைத்தியர் இல்லாத காரணத்தினால் எட்டு கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் உள்ள புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கே சிகிச்சை பெற செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதில் கவனத்தில் எடுத்து வைத்தியரை நியமிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கிராமங்களில் சகல வசதிகளுடனும் வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டு இருந்தாலும் பல வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பற்றாக்குறை தொடர்ந்து வருகின்றது இதனால் அதிகளவான நோயாளர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாய நிலைக்கு தள்ளப்படுகின்றமையும் தொடர்ந்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.