(எம்.ஆர்.எம்.வஸீம்)

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்வதில் எந்தப்பயனும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு எதிராக உடனடியாக வழக்குத்தாக்கல் செய்ய சட்டமா அதிபர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

பிணைமுறி மோசடியில் பிரதான சந்தேக நபரான அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவருவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. ஆனால் அதுதொடர்பில் தற்போதைய நிலை என்னவென யாருக்கும் தெரியாது. அதனால் அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சியின் முன்னேற்றம் தொடர்பாக மாதாந்தம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவேண்டும். தொடர்ந்து இதனை பேசிக்கொண்டிருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.