ஆரச்சிகட்டுவை மற்றும் குருநாகல் பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஆரச்சிகட்டுவ

ஆரச்சிகட்டுவை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தளம் - கொழும்பு வீதி, பண்டாரஹேன சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

புத்தளத்திலிருந்து சிலாபம் நோக்கி சென்ற முச்சக்கரவண்டி எதிர்திசையில் வந்த மற்றுமொரு முச்சக்கர வண்டியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதார். 

குறித்த பெண் 53 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்தனர். மேலும் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, மற்றுமொரு பெண் உள்ளிட்டவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்குக் காரணமாயிருந்த முச்சக்கர வண்டியின் சாரதி தப்பித்துச் சென்றுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

குருநாகல்

குருநாகல் - தம்புள்ளை வீதியில் கிரிவவ்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர். 

தம்புள்ளை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கில் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கில் ஓட்டுநர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

13ஆம் கட்டை - கொகரெல்ல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவரே குறித்த விபத்தில் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.