(செ.தேன்மொழி)

மத்தியவங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் வெளிவந்துள்ள தடயவியல் அறிக்கையின் பிரகாரம் முன்னாள் மத்தியவங்கி ஆளுனர் அஜித் நிவாட்கப்ரால் காலத்திலும் பிணைமுறி மோசடி இடம்பெற்றுள்ளதாக உறுதியாகியுள்ளது. இதனால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரை தனது ஆலோசகர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் மத்தியவங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் பரிசீலனைகளை மேற்கொண்டிருந்த கோப் குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

இதன் பிரதிகள் சட்டமா திணைக்களத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் சட்டமா திணைக்களம் அவதானம் செலுத்தி குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கைக எடுக்க வேண்டும். 

பிணைமுறி மோசடி தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்களை ஆளும் தரப்பினர் திரிவுப்படுத்த முயற்சிக்கின்றனர். நல்லாட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடியை கொள்ளை என்றும் , 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் செயற்பட்டு வந்த அரசாங்கத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகளை நட்டம் என்றும் தெரிவித்து வருகின்றனர். ஊழியர் சேமலாப நிதியே இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறுனார்.