(எம்.மனோசித்ரா)

வுஹான் நகரிலிருந்து தனது நாட்டு விமானத்தை அனுப்பி பிரஜைகளை அழைத்து வந்த நான்காவது நாடாக இலங்கை உள்ளது. 

இலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் காணப்படும் உயர்மட்ட இராஜதந்திர உறவுகள், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் மீது சீன அரசாங்கம் வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாக மாணவர்களை உடனடியாக அழைத்துவரக்கூடியதாக இருந்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

வுஹான் நகரிலிருந்து சிறுவர்கள் நால்வர் உள்ளிட்ட 33 மாணவர்கள் சனிக்கிழமை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது : 

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின்பேரில் ஜனாதிபதி அலுவலகம், வெளிவிவகார அமைச்சு, பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம், கொழும்பில் உள்ள சீன தூதரகம், சிவில் விமான சேவைகள் அதிகார சபை, இலங்கை இராணுவ மற்றும் விமானப் படைகள் மேற்கொண்ட கூட்டு முயற்சியின் பயனாக இந்த நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளன. 

மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தவர்களுள் 04 சிறு குழந்தைகளும் உள்ளடங்குவர். அனைவரும் அணிந்திருந்த ஆடைகளுக்குப் பதிலாக புதிய ஆடைகள் வழங்கப்பட்டு முழுமையான சுகாதார பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். 

அவர்கள் நல்ல ஆரோக்கிமான நிலையில் உள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்தியதன் பின்னர் தியத்தலாவைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதற்கு சுகாதார வசதிகளுடன்கூடிய சொகுசு பஸ் வண்டி பயன்படுத்தப்பட்டதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது. 

இராணுவத் தளபதியின் பணிப்புரையின்பேரில் 72 மணித்தியால குறுகிய காலப் பகுதியில் தியத்தலாவை இராணுவ பயிற்சி முகாமில் அமைக்கப்பட்டுள்ள நிலையத்தில் தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து தேவைகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இராணுவம் மற்றும் சுகாதார திணைக்களத்தை சேர்ந்த மருத்துவ குழுக்களும் பொதுச் சுகாதார அதிகாரிகளும் நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். 14 நாட்கள் கண்காணிப்பின் பின்னர் மாணவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.