ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் எயார் பஸ்ஸிற்கு இடையேயான ஒப்பந்தத்தின் போது விமானக் கொள்முதலில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில்  விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

ஐரோப்பாவை தளமாக கொண்டியங்கும் எயார் பஸ் நிறுவனம் மற்றும்  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தம் தொடர்பில்  மோசடி இடம்பெற்றுள்ளதாக பல ஊடகங்கள் கருத்து தெரிவித்ததையடுத்து, ஜனாதிபதி இந்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த ஒப்பந்தம் தொடர்பில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை ஜனாதிபதி கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2011 மற்றும் 2015 க்கு இடையில் இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, தாய்வான் மற்றும் கானடா ஆகிய நாடுகளில் நிறுவனம் பயன்படுத்திய வெளியாலோசகர்களுக்கு இலஞ்சம் வழங்கியது தொடர்பில் எயார் பஸ் நிறுவனம் மீது நான்கு  ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, விமான உற்பத்தியாளர் எயார் பஸ் மற்றும் இலங்கை சம்பந்தப்பட்ட ஊழல்fகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.