'தயவு செய்து எனது மகளை அழைத்து செல்லுங்கள்' என புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவதியொருவரின் தாயார் ஹூபே மாகாணத்திலிருந்து வெளியேறும் பாலத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியிலுள்ள அதிகாரிகளிடம் மன்றாடிக் கேட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த வுஹான் நகரம் அமைந்துள்ள ஹூபே மாணத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய லு யுஜெஜின் என்ற பெண், லுகேமியா என்ற புற்று நோயால் பாதிக்கப்பட்ட தனது 26 வயதுடைய மகளை சிகிச்சைக்காக ஹூபே மாகாணத்தை விட்டு வெளியேற்றுவதற்கு பெரிதும் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இதன் இறுதிக் கட்டமாக அவர் நேற்றைய தினம் ஹூபே மாகாணத்திலிருந்து வெளியேறும் யாங்சே ஆற்றின் மேம்பாலத்தை கடக்க முற்படுகையில் அங்குள்ள காவல் அதிகாரிகளால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடைசெய்வதற்காக ஹூபே மாகாணம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு உட்பிரவேசிக்கவும், வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் சோதனைச் சாவடியில் உள்ள காவலாளிகளிடம் மன்றாடிய அவர், எனது மகளுக்கு சிகிச்சையளிக்க வுஹானின் அதிகப்படியான வைத்தியசாலைகள் இல்லை. ஆகையினால் அவளை ஜியுஜியாங்கில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும் தயவு செய்து எங்களை வெளியேற அனுமதி அளியுங்கள். இல்லையெனில் எனது மகளை அழைத்து செல்லுங்கள் என்று உருக்கமான வேண்டுகோளை முன்வைத்து கண்ணீருடன் மன்றாடினார்.

இதன்போது நோயால் பாதிக்கப்பட்டிந்த குறித்த பெண்ணின்  மகள், ஒரு போர்வையால் போர்த்தப்பட்ட தரையில் அமர்ந்திருந்தாள்.

நீண்ட நேர மன்றாட்டத்தின் பின்னர் குறித்த பகுதிக்கு அம்பியூலன்ஸ் வண்டியொன்று வரவழைக்கப்பட்டு இருவரும் ஹூபே மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.