மெல்போர்னில் இடம்பெற்று வரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் டொமினிக் தீம் அலெக்சாண்டர் ஸ்வெரெவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் இன்று இடம்பெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசைப் பட்டியலில் 7 ஆவது இடத்தில் உள்ள 22 வயதான ஜேர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ்வும், தரவரிசையில் 5 ஆவது இடத்தில் உள்ள 26 வயதான ஆஸ்திரியாவின் டொமினிக் தீமும் ஒருவருடன் ஒருவர் முட்டி மோதினர்.

சுமார் 3 மணித்தியாலங்களும் 42 நிமிடங்களும் நீடித்த இந்த ஆட்டத்தின் இறுதியில் டொமினிக் தீம் 3-6 6-4 7-6 (7-3) 7-6 (7-4)என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ்வை வீழ்த்தி அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தெடாரின் இறுதிப் போட்டியில் கால் பதித்தார்.

இதனால் எதிர்வரும் 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் டொமினிக் தீம் செர்பியாவின் நோவக் ஜோகோவிசை எதிர்கொள்வார்.

இதேவளை நாளை இடம்பெறவுள்ள பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனினும், ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருசாவும் ஒருவருடன் ஒருவர் மல்லுக்கட்டவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.