(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரச அதிகாரத்தில் இருந்துகொண்டு ஜனாதிபதி தேர்லை வெற்றிகொள்ள முடியாமல் போன ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு பொதுத் தேர்தலை வெற்றிபெறுவதாக தெரிவிப்பது சிறுபிள்ளைத்தனமான செயலாகும் என ராஜாங்க அமைச்சர் திலங்க சுமத்திபால தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடக கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய் சாட்டுப்போக்குகளை தெரிவித்துவருவதாக ஐக்கிய தேசிய கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

வாக்களித்த மக்களை ஏமாற்றவேண்டிய எந்த தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை. என்றாலும் அரசாங்கம் தற்போது செயற்பட்டுவருவது கடந்த அரசாங்கத்தினால் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிவரை நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கையின் அடிப்படையிலாகும். 

அதனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வின் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றது.

இருந்தபோதும் அரசாங்கம் வட் வரியை குறைத்து மக்களுக்கு பாரிய நிவாரணத்தை வழங்கி இருக்கின்றது. அதன் பயன் இன்னும் சில வாரங்களில் பூரணமாக கிடைக்கப்பெறும். அத்துடன் மார்ச் மாதம் ஆரம்பத்தில் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்லவதே எமது திட்டமாகும்.

தேர்தலுக்கு பின்னர் அரசாங்கம் முன்வைக்கும் வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போதுமான ஒதுக்கீடுகளை மேற்கொள்வோம். 

அத்துடன் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையை பெற்று அரசாங்கத்தை அமைக்கப்போவதாக  ஐக்கிய தேசிய கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

அவர்கள் அரசாங்கம் அமைப்பதற்கு முன்னர் கட்சிக்குள் இருக்கும் தலைமைத்துவ பிரச்சினையை தீர்த்துக்கொள்ளவேண்டும். கட்சிக்குள் இருக்கும் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி மக்களின் பிரச்சினையை தீர்ப்பார்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்.