Published by R. Kalaichelvan on 2020-01-31 16:31:47
(எம்.ஆர்.எம்.வஸீம்)
மத்ரஸாக்களை பதிவு செய்யும் நடவடிக்கைக்குப் பொறுப்பாக இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருப்பது முஸ்லிம் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடாகும்.
மத்ரஸா பதிவு நடவடிக்கைகள் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் ஊடாகவே மேற்கொள்ளவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
நாட்டில உள்ள குர்ஆன் மத்ரஸாக்கனை பதிவுசெய்யும் நடவடிக்கைக்கு பொறுப்பாக ராணுவ அதிகாரி ஒருவரை நியமித்திருப்பது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குர்ஆன் மத்ரஸாக்கள், அரபுக் கல்லூரிகளை மீளப் பதிவு செய்து முழுமையான மறுசீரமைப்பொன்றை மேற்கொள்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக நாம் அறிகிறோம். இருந்தபோதும் நாட்டிலுள்ள அனைத்து மத்ரஸாக்களும் அரபுக் கல்லூரிகளும் கலாசார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2015 க்கு முன்னர் மத்ரஸாக்கள் பதிவு செய்தல் மற்றும் அரபுக் கலாசாலைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எனினும், நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர் அப்துல் ஹலீமின் முயற்சியினால் பெரும்பாலான மத்ரஸாக்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.
இவ்வாறான நிலையில் இன்னும் பதிவுசெய்யப்படாத மத்ரஸாக்கள் இருப்பின் அவற்றை பதிவுசெய்து கொள்வதற்கான கால அவகாசத்தை அரசாங்கத்தால் வழங்க முடியும்.
இதனை தவிர்த்து அனைத்து மத்ரஸாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளையும் மீண்டும் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்திருப்பது கால விரயத்தை வீணாக்குவதுடன் அரசுக்கு மேலும் செலவீனத்தையும் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. அதனால் கடந்தகாலப் பதிவுகளை பேணுவதே சிறப்பானதாக அமையும்.
அத்துடன் மத்ரஸாக்களை பதிவு செய்யும் நடவடிக்கைக்குப் பொறுப்பாக இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது முஸ்விம் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.