(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் சகல நடவடிக்கைககளையும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் அதைப் பற்றி குறை கூறும் எதிர்க்கட்சி இதன் மூலம் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பது கவலையளிக்கிறது என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 

பண்டாநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற கண்காட்சியொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். 

தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் , 

சிறிதளவும் பிரயோசனமற்ற குற்றச்சாட்டே எம்மீது முன்வைக்கப்படுகின்றது. இலங்கையில் இது வரையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் மாத்திரமே இணங்காணப்பட்டுள்ளார். அவரை குணப்படுத்துவதற்கான அனைத்து சிகிச்சைகளையும் வைத்தியர்கள் வழங்கி வருகின்றனர்.

அத்தோடு சீனாவிலுள்ள இலங்கை மாணவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவர்கள் தியத்தலாவை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் உடல்நலம் தொடர்பில் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு பல வழிகளிலும் எம்மால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் எந்நேரமும் அரசாங்கத்தை குறை கூறும் நோக்கத்துடன் மாத்திரமே சிலர் செயற்படுகின்றனர். அவ்வாறானவர்கள் இதன் மூலம் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பது கவலையளிக்கிறது. 

பொதுத் தேர்தல்

ஐக்கிய தேசிய கட்சிக்கு நிலையான கொள்கை கிடையாது. எப்போதும் அவர்கள் கனவிலேயே வாழ்பவர்கள். அதே போன்று தான் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி - சஜித் பிரேமதாச பிரதமர் என்று கனவு காண்கின்றனர். பொதுத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் அவர்கள் மேலும் பின்னடைவை சந்திப்பார்கள் என அவர் தெரிவித்தார்.