(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில் சிறு குறைபாடுகள் இருக்கலாம்.

ஆனால் அதனை வைத்து அரசியல் செய்யும் சந்தர்ப்பம் இதுவல்ல என்று பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது : 

அரசாங்கத்தினால் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிறு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

அவற்றை எம்மால் சீர் செய்து கொள்ள முடியும். எனினும் அதனை விரைவாகச் செய்ய வேண்டும். இந்த விடயத்தை வைத்து அரசியல் செய்ய முற்படுவது தவறான விடயமாகும். 

கடந்த அரசாங்கத்தில் சுகாதார துறையில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டன. ஆனால் அவற்றைப் பற்றி தற்போது பேசிக் கொண்டிருப்பதாலும் எந்த பயனும் இல்லை. இது கட்சி , அரசியல் பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய தருணமாகும். அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் மக்களுக்கு உரிய சேவைகளை செய்ய முடியும். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் பிரதமர் என்ற ரீதியின் நாட்டு பிரஜை என்ற ரீதியிலும் மக்களுக்கான யோசனைகளை முன்வைக்க முடியும்.

அதே போன்று அரசியல் வட்டாரங்களிலும் கட்சி பேதமின்றி இணைந்து செயற்படவும் முடியும். இதில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எவ்வித இரகசிய அரசியல் ஒப்பந்தமும் கிடையாது. 

ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அதே பழைய கூட்டணியையே அமைத்திருக்கிறது. இந்த கூட்டணியையே நாம் ஜனாதிபதித் தேர்தலின் போது தோல்வியடைச் செய்தோம். பொதுத் தேர்தலிலும் இவர்களை தோல்வியடைச் செய்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் பெரும்பான்மை அரசாங்கத்தை உருவாக்குவோம் என அவர் தெரிவித்தார்.