நியூஸிலாந்து அணிக்கு எதிரான நான்காவது சர்வதேச இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி 165 ஓட்டங்களை குவித்துள்ளது.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளை கொண்ட இருபதுக்கு - 20 தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது.

இத் தொடரில் முன்னதாக நடைபெற்ற மூன்று போட்டிகளையும் இந்திய அணி வெற்றிபெற்று, கிண்ணத்தை தனதாக்கியுள்ள  நிலையில் நான்காவது போட்டி இன்றைய தினம் வெலிங்டனில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்ய, இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை குவித்தது.

இந்திய அணி சார்பில் ராகுல் 39 ஓட்டங்களையும், சஞ்சு சம்ஸன் 8 ஓட்டங்களையும், விராட் கோலி 11 ஓட்டங்களையும், ஸ்ரேஸ் அய்யர் ஒரு ஓட்டத்தையும், சிவம் டூப் 12 ஓட்டங்களையும் வொசிங்டன் சுந்தர் டக்கவுட்டுடனும், சர்துல் தாகூர் 20 ஓட்டங்களுடனும் சஹால் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க மனிஷ் பாண்டே 36 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களுடனும், சைனி 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் இஷ் சோதி 3 விக்கெட்டுக்களையும், ஹமிஷ் பென்னட் 2 விக்கெட்டுக்களையும், டீம் சவுதி, மிட்செல் செண்டனர் மற்றும் ஸ்காட் குகலீஜ்ன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.