(எம்.மனோசித்ரா)

மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பான தடவியல் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுவதற்கு முன்னரே அதன் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் அந்த அறிக்கை தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது பெறும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே அவர் நிதி அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும். அல்லது அரசாங்கம் அவரை பதவி நீக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், 

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான தடவியல் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுவதற்கு முன்னரே மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் கலவரமடைந்துள்ளார். அதற்கு எதிரான கருத்துக்களையும் வெளியிடுகின்றார். 

நிதி அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகராக இருக்கும் அவர் இவ்வாறு செயற்படுவது பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. எனவே இந்த அரசாங்கம் ஊழல் மோசடிகளுக்கு எதிரானது என்பது உண்மையென்றால் அஜித் நிவாட் கப்ரால் உடன் பதவி நீக்கப்பட வேண்டும். அல்லது அவர் தானாகவே பதவி விலக வேண்டும். 

செயற்குழு விவகாரம்

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிலிருந்து என்னையும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவையும் நீக்கிவிட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். அந்த செய்தியைத் தவிர எமக்கு அது பற்றி எந்த தகவலும் தெரியாது. எமக்கு அவ்வாறு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுமில்லை. 

சஜித் தலைமையில் கூட்டணி

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைத்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம்.

தொடர்ச்சியாக இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல்களும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது எம்முடன் முற்போக்கு கட்சிகள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பலவும் கைகோர்த்துள்ளன. 

பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசவே பிரதமர் வேட்பாளர் என்பதிலும் அவர் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்பதிலும் எவ்வித மாற்றமும் இல்லை. தேர்தலில் எவ்வாறு போட்டியிடப் போகின்றோம் என்பது தொடர்பில் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் என்றார்.