(எம்.மனோசித்ரா)

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தினால் கொழும்பில் விஷேட போக்குவரத்து ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பணிப்பாளர் தெரிவிக்கையில், குறித்த விஷேட போக்குவரத்து ஒழுங்குகளுக்கு அமைய நாளை காலை 8.30 மணிமுதல் பகல் 1 மணிவரையும், பெப்ரவரி முதலாம் திகதி காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணிவரையும், பெப்ரவரி 2 ஆம் திகதி காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், பெப்ரவரி மூன்றாம் திகதி காலை 8.30 மணிமுதல் பகல் 1 மணிவரையும் , பெப்ரவரி 4 ஆம் திகதி (சுதந்திர தினத்தன்று) அதிகாலை 4 மணி முதல் பகல் 1 மணி வரையும் சுதந்திர சதுக்க வளாக வீதிகள் மூடப்பட்டிருக்கும் என்றார். 

இராணுவம்

இராணுவத்தின் ஏற்பாடுகள் பற்றி இராணுவ ஊடக பணிப்பாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவிக்கையில், 

72 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு சுதந்திர சதுக்க வளாகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, முப்படைகளின் தளபதி, முப்படையின் பதில் பாதுகாப்பு பிரதானி மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் தலைமையில் மரியாதை அணி வகுப்பு இடம்பெறும். 

மரியாதை அணிவகுப்பின் முதன்மை தளபதியாக மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகேவும், இரண்டாவது தளபதியாக பிரிகேடியர் ஹரேந்திர ரணசிங்கவும் தலைமை தாங்குவார்கள். 

அணிவகுப்பில் 3110 இராணுவத்தினரும், 737 கடற்படையினரும், 761 விமானப்படையினரும் , 529 பொலிஸாரும், 278 விஷேட அதிரடிப்படையினரும், 385 சிவில் பாதுகாப்பு பிரிவினரும், 262 ஏனைய கெடட் படையினரும் மற்றும் 475 கலாசார குழுவினரும் உள்ளடங்குகின்றனர். 

இதே போன்று வாகன அணிவகுப்பில் 266 இராணுவத்தினரும், 62 கடற்படையினரும், 86 விமானப்படையினரும் , 67 பொலிஸாரும், 249 விஷேட அதிரடிப்படையினரும்,உள்ளடங்குகின்றனர் என்றார். 

கடற்படை 

கடற்படையின் ஏற்பாடுகள் பற்றி கடற்படை ஊடக பேச்சாளர் இசுரு சூரய பண்டார தெரிவிக்கையில், 

இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றாலும் கடற்படையினால் வழமையாக செய்யப்படும் ஏற்பாடுகள் கொழும்பு - காலி முகத்திடலில் செய்யப்பட்டுள்ளது. ' உங்களின் கடற்படை ' என்ற தொனி பொருளில் நாட்டு மக்கள் அனைவரும் பார்வையிடக் கூடியவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதியம் 2 மணிமுதல் இவற்றை பொது மக்கள் பார்வையிட முடியும். அத்தோடு நண்பகல் 12 மணிக்கு 25 மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்படும். 

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஒருவாரம் பொது மன்னிப்பு காலம் வழங்கப்படும். எனவே இந்த ஒரு வார காலத்திற்குள் சட்ட ரீதியற்ற முறையில் கடற்படையிலிருந்து சென்றவர்களுக்கு மீண்டும் இணைந்து கொள்ள முடியும். அவ்வாறு இணைபவர்களுக்கு ஒருபோதுத் தண்டனை வழங்கப்பட மாட்டாது என்றார். 

விமானப்படை

விமானப்படையின் ஏற்பாடுகள் பற்றி விமானப்படையின் ஊடக பணிப்பாளர் கிஹான் செனவிரத்ன தெரிவிக்கையில், 

இலங்கை விமானப்படை கல்லூரியின் பீடாதிபதி விமானப்படை அணிவகுப்புக்கு தலைமைத்துவம் வழங்கவுள்ளார். விமானப்படை அணிவகுப்பில் விமானங்களும் கலந்து கொள்ளவுள்ளன. கே.8 ரக விமானங்கள் மூன்றும், சீனா தயாரிக்கப்பட்ட பி.டி.6 ரக விமானங்கள் ஐந்தும், செஸ்ன 150 ரக விமானங்கள் ஐந்து உள்ளிட்ட விமானங்கள் , ஜெட் விமானங்கள் என்பனவும் பங்குபற்றவுள்ளன என்றார்.