மெல்போர்னில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் கார்பைன் முகுருசா மற்றும் சோபியா கெனின் ஆகியோர் மோதுகின்றனர்.

மெர்போர்னில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் இன்றைய தினம் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டு அரையிறுதி ஆட்டங்கள் இடம்பெற்றன.

முதல் அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 15 ஆவது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனையான 21 வயதுடைய சோபியா கெனினும், முதலிடத்தில் உள்ள அவுஸ்திரேலிய வீராங்கனையான 23 வயதான ஆஷ்லீ பார்டியும் மோதினர்.

சுமார் 1 மணித்தியாலங்களும் 45 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் இறுதியில் கெனின் 7-6 (8-6) 7-5 என்ற கணக்கில் ஆஷ்லீயை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதேவேளை மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 3 ஆம் இடத்தில் உள்ள 28 வயதான ருமேனிய வீராங்கனையான சிமோனா ஹாலெப்பும், தரவரிசையில் 32 ஆம் இடத்தில் உள்ள 26 வயதான ஸ்பெய்ன் வீராங்கனை கார்பைன் முகுருசாவும் மோதினர்.

சுமார் 2 மணித்தியாலங்களும் 05 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 7-6 (10-8) 7-5 என்ற செட் கணக்கில் ஹாலெப்பை வீழ்த்தி முதன் முறைாக அவுஸ்திரேலிய பகிரங்க  டென்னிஸ் தொடரின் இறுதி சுற்றில் முகுருசா கால் பதித்தார்.

இதனால் சனிக்கிழமை நடைபெறவுள்ள பெண்கணுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் கார்பைன் முகுருசா, சோபியா கெனினும் மோதவுள்ளனர்.

இதேவளை ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்றைய தினம் இடம்பெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் இரண்டம் இடத்தில் உள்ள செர்பியாவின் 32 வயதுடைய வீரரான நோவக் ஜோகோவிசும், தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து வீரருமான 38 வயதுடைய ரோஜர் பெடரரும் மோதினர்.

சுமார் 2 மணித்தியாலங்களும் 18 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7-6 6-4 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

நாளை இடம்பெறவுள்ள ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் மற்றுமோர் அரையிறுதி ஆட்டத்தில் டொமினிக் தீமும், அலெக்சாண்டர் ஸ்வெரெவ் மோதுகின்றனர்.

இதில் வெற்றிபெறுபவர் இறுதிப் போட்டியில் ஜோகோவிசை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.