போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்காக 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இஸ்ரேலிய நாட்டைச் சேர்ந்த நாமா இசச்சர் என்ற பெண்ணை விடுதலை செய்யுமாறு புட்டின் உத்தரவு பிறப்பித்துள்ளதாக ரஷ்யா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இரட்டை குடியுரிமையை பெற்ற இச்சார், கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மொஸ்கோவில் சட்டத்தரணியாக கடமையாற்றிக் கொண்டிருந்த காலத்தில் இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு பயணித்தபோது போதைப்பொருடன் கைதுசெய்யப்பட்டார்.

அவரது பைகளிலிருந்து 9.5 பிராம் கஞ்சாவை பொலிஸார் கண்டு பிடித்தனர். இதன் பின்னர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இசச்சார் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 7.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதன் பின்னர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ரஷ்ய நாட்டு ஜனாதி புட்டினுடன் அவருக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு பல முறை வலியுறுத்தி வந்தார்.

இந் நிலையிலேயே புட்டின் அவரை மன்னித்து விடுதலை செய்துள்ளார். இதேவேளை புட்டினின் இந்த நடவடிக்கைக்காக இஸ்ரேல் பிரதமர் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.