மலையகத்தில் கல்வி வளர்ச்சி குறித்த தூரநோக்கு செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக கூறப்படும் நிலையில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கவரவில தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர் ஒருவர் தனக்கு கற்பிப்பதற்கு நேர அட்டவனை எதனையும் அதிபர் போடவில்லை எனவும், தனது புகார்களை வலய கல்வி பணிமனை அதிகாரி கண்டுகொள்ளவில்லை என கூறி நேற்றைய தினம் (29.01.2020) விசமருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த ஆசிரியர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் இன்றயதினம் பாடசாலை அதிபரையும் தற்கொலைக்கு முயற்சித்த குறித்த ஆசிரியரையும் பாடசாலையை விட்டு வெளியேற்றுமாறு பெற்றோர்களும், பாடசாலையின் பழையமானவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வினவுவதற்காக குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும் ஹட்டன் கல்வி வலய பணிப்பாளரை தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் மலையக ஆசிரியர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கவரவில தமிழ் மகா வித்தியாலயத்தில் தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ள குறித்த ஆசிரியர், அதிபரினதும் வலயக் கல்வி திணைக்களத்தினதும் தொடர்ச்சியான பழிவாங்கல் காரணமாக விரக்தியுற்று பாடசாலையில் அதிபரின் முன்நிலையிலேயே நஞ்சறுந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது முழு ஆசிரிய சமூகத்தையுமே அதிர்ச்சிக்குள் ஆளாக்கியுள்ளது. 

கடந்த காலங்களில் கவரவில தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக விசாரணைக்கு வந்திருந்த மத்திய மாகாண கல்வி திணைக்கள விசாரணை குழுவிற்கு தகவல்களை வழங்கினார் என்பதே அவருக்கு எதிராக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காரணமாகும். 

அதற்கு பின்னரே ஆசிரியர் மீது திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளை அதிபரும் வலயக்கல்வி திணைக்களமும் கூட்டாக தொடங்கியதாக செய்திகள் எழுந்துள்ளன.

விசாரணை குழுவுக்கு தகவல்களை தந்துவிட்டார் என்ற காழ்ப்புணர்வு காரணமாக அவரை, இப் பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகையில்,  மேலதிக ஆசிரியர் என காரணம் காட்டி வலயக் கல்வி பணிப்பாளரால் உடன் அமுலுக்கு வரும்வகையில் மொக்கா தமிழ் வித்தியாலயத்திற்கு அவர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படி, தான் பழிவாங்கப்படுவதை உணர்ந்த ஆசிரியர் மத்திய மாகாண கல்வி பணிப்பாளருக்கு முறையிட்டு தான் வித்தியாலய ஊழல் தொடர்பில் வழங்கிய வாக்குமூலத்திற்காகவே பழிவாங்கப்படுவதாக மாகாண கல்வி பணிப்பாளருக்கு விளக்கமளிக்க அதிர்ச்சியுற்ற மாகாணக் கல்வி பணிப்பாளர் இவரின் இடமாற்றத்தை உடனடியாக  இரத்து செய்து,  தொடர்ந்து கவரவில வித்தியாலயத்தில் பணியாற்ற சிறப்பு அனுமதி வழங்கியிருந்தார்.

ஆனால், மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் கட்டளைக்கு இணங்க இவர், தொடர்ந்து குறித்த பாடசாலையில் இருந்த போதும், இவருக்கு அட்டவணையை வழங்க அதிபர் மறுத்துவிட்டார். 

இவ் அநீதிக்கு எதிராக, ஆசிரியர் உடனடியாக, பாடசாலை வளாகத்திலேயே, அதிபரின் அலுவலகத்திற்கு முன்னால் ஓர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார். ஊடகங்களும், மக்களும் இவரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு தந்த ஆதரவினை பார்த்த அட்டன் கல்வி வலய திணைக்கள அதிகாரியும் அதிபரும் நேரசூசியை வழங்கினர். 

இத்தோடு குறித்த பிரச்சினை தீர்ந்தது என எண்ணி இருக்கையில் தொடர்ந்தும் பல்வேறு வகையான இன்னல்களுக்கும் கெடுபிடிகளுக்கும் இவரை அதிபரும் கோட்டக் கல்வி பணிப்பாளரும் வலயக் கல்வி பணிமனையும்  தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனை தாங்கிக் கொள்ள முடியாத குறித்த ஆசிரியர்  தனக்கு நடக்கும் அநீதிகளை பட்டியலிட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பியுள்ளார். ஜனாதிபதி செயலகமும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இச்சூழ்நிலையிலேயே, இவ்வாண்டு தொடங்கியவுடன் இவருக்கான நேரசூசி பறிப்பு மீண்டும் அரங்கேற தொடங்க ஆசிரியரும் அதனை தனிப்பட்ட ரீதியில் முகம்கொடுத்து வந்துள்ளார்.

இச்சூழலில், கடந்த (28.01.2020) செவ்வாய் கிழமை, மத்திய மாகாண திணைக்களத்தின் குழு விஜயம் ஒன்று குறித்த பாடசாலையில் திடீரென இடம் பெற்றுள்ளது. அக் குழுவினரிடம், ஆசிரியரும் மீள தன்னை பழிவாங்கும் நடவடிக்கை முன்னெடுப்பது குறித்து முறைப்பாடு செய்துள்ளார். அதனை விசாரித்த அக் குழுவினர் இவருக்கு நேரசூசி வழங்குவது கட்டாயமானது என அதிபருக்கு வலியுறுத்தி சென்றுள்ளனர்.

 

ஆனால் மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் சென்ற மறுதினமே ஆசிரியருக்கு மீண்டும் இடமாற்றப்படுவதாக அட்டன் வலய கல்வி பணிப்பாளரால் இடமாற்ற உத்தரவு விடுக்கப்பட்டு, அவ்உத்தரவும், அதிபருக்கூடாக அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மாகாண கல்வி திணைக்களம் , ஜனாதிபதி செயலகம் , மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என இவர் பலரிடம் முறையிட்டிருந்த போதும், தனக்கான ஒரு நீதி கிடைக்காத விரக்தியில் இவர் இப்படி  இத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

 

இந்நிலையில் அதிபரினதும் பணிப்பாளர்களினதும் பழிவாங்கும் நடவடிக்கைகளின் காரணமாகவே தன் கணவர் தற்கொலை முயற்சியல் ஈடுபட்டார் என குறித்த ஆசிரியரின் மனைவி மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலையில் நடந்த ஒரு ஊழல் மோசடியை உயர் அதிகாரிகளின் விசாரணையில் முன்வைத்ததற்காக அதிபராலும் கல்விப் பணிமனையினாலும் ஆசிரியர் இப்படி பழிவாங்கப்பட்டு ஓர் உயிர் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது குறித்து உரிய அதிகாரிகள், உடனடி விசாரணை குழுவொன்றை நியமித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மலையக ஆசிரியர் ஒன்றியம் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளது.

இந்த பாடசாலையில் 37 ஆசிரியர்களும் 700 க்கும் மேற்பட்ட மாணவர்களும் கல்வி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.