ஹப்புத்தளை அரசினர் வைத்தியசாலை வைத்தியரைத்  தாக்கிய தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிறுத்திய நிலையில்  குறித்த இருவரையும் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஹப்புத்தளை அரசினர் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரையே மேற்படி தனியார் பஸ் சாரதி, நடத்துநர் ஆகியேரினால் தாக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த தாக்குதலில் படுகாயங்களுக்குள்ளான வைத்தியர் தியத்தலாவை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஹப்புத்தளைப் பகுதியின் தங்கமலை பெருந்தோட்ட பிரதேச அரச வைத்தியசாலையில் கடமைக்கு மேற்குறித்த வைத்தியர் தமது வாகனத்தில் சென்ற போது எதிர்த்திசையில் வந்த தனியார் பஸ் சாரதி பஸ்சை நிறுத்திவிட்டு சாரதியும், நடத்துநரும் வைத்தியரைப் பலமாகத் தாக்கியுள்ளனர்.

இது விடயம் குறித்து ஹப்புத்தளைப் பொலிசாருக்கு தெரியவரவே பொலிசார் விரைந்து வைத்தியரை தியத்தலாவை அரசினர் வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் வைத்தியரைத் தாக்கிய தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துநரைக் கைது செய்தனர்.

இந்நிலையில் குறித்த இருவரும் விசாரணையின் பின்னர் இன்று 30-01-2020 பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதிபதி மேற்படி விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.