இந்தியாவின் மஹாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் முச்சக்கர வண்டியுடன் அரச பயணிகள் பஸ் நேருக்க நேர் மோதி கிணற்றுக்குள் விழுந்ததில் 26 பேர் பலியாகியுள்ளதுடன் 18க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாசிக் மாவட்டத்தின் கல்வான் நகரில் இருந்து துலே மாவட்டத்தை நோக்கி பயணித்த குறித்த பஸ் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான்-தியோலா வீதியை கடக்கும் போது எதிரே பயணிகளுடன் பயணயித்த முச்சக்கர வண்டியுடன்  நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

மோதிய வேகத்தில் பஸ்ஸின் கீழ் முச்சக்கரவண்டி  சிக்கிக் கொண்டது. இதனையடுத்து பஸ் வீதியின் ஓரம் இருந்த கிணற்றுக்குள் விழுந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இவ் விபத்தில் பஸ், முச்சக்கரவண்டியில் பயணித்த 26 பேர் உயிரிழந்ததுடன் 18க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 9 பெண்களும் 07 வயது சிறுமியும் அடங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸ்ஸின் சாரதி பஸ்ஸை வேகமாக செலுத்தியமையே இவ்விபத்துக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.