யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்குப் பயணித்த அரச பஸ் சாரதி மதுபோதையிலிருந்தமையால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அதில் பயணித்த 46 பயணிகளையும் மற்றொரு பஸ்ஸில் அக்கரைப்பற்றுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவம் இணைந்து பஸ்ஸை சோதனையிட்டுள்ளனர். 

இந்நிலையில், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் பஸ்களை சோதனையிடும் நடவடிக்கையை 512ஆவது படைத்தளத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் நாவற்குழியில் நேற்று இரவு மேற்கொண்டனர்.

 யாழ்ப்பாணம் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினரும் இந்தச் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்திலிருந்து 7.45 மணிக்கு அக்கரைப்பற்றுக்குப் புறப்படும் பஸ் நாவற்குழி சோதனைச் சாவடியில் மறிக்கப்பட்டுச் சோதனையிட முற்பட்ட போது, சாரதி மதுபோதையிலிருந்தமை கண்டறியப்பட்டது. சாரதியை பஸ்ஸிலிருந்து இறக்கிவிட்ட இராணுவத்தினர், பஸ்ஸை சோதனையிட்டபோது, 2 பியர் ரின்களும் மதுபான போத்தல் ஒன்றும் சாரதியின் இருக்கைக்குக் கீழ் இருந்து மீட்கப்பட்டன.

சாரதி கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன், அவர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் கோண்மாவில்  வீதி முகாமையாளருக்கு அறிவிக்கப்பட்டது.

46 பயணிகளும் அக்கரைப்பற்றுக்குப் பயணிப்பதற்கு கோண்டாவில் வீதியைச் சேர்ந்த மற்றொரு பஸ்ஸை அனுப்பிவைக்குமாறு பொலிஸார் அறிவித்தனர்.

மக்களின் பாதுகாப்புக் கருதியே இந்தப் பஸ்ஸை தடுத்துவைத்துவிட்டு மற்றொரு பஸ்ஸை வரவழைத்துள்ளோம் என பொலிஸார் தெரிவித்தனர்.