(எம்.எப்.எம்.பஸீர்)

ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில்  சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தும் வண்ணம் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி செயற்பட்டமை தொடர்பில், நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் கடற்படையின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் இருவர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டனர். 

5 மாணவர் உள்ளிட்ட 11 பெர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின்  பிணையில் உள்ள 8, 9 ஆம் பிரதிவாதிகளான அனுர துஷார மெண்டிஸ் மற்றும் கஸ்தூரிகே காமினி ஆகியோரே இவ்வாரு கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். 

இதன்போது அவ்விருவரையும் எதிர்வரும்  31 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்தில் விளக்கமறியலில் உள்ள சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்னவையும் மேலும் நான்கு பேரையும் நீதிமன்றில் ஆஜர்செய்யுமாறு சி.ஐ.டி.யின் பணிப்பாளருக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அவ்வாறு குறித்த உத்தரவுக்கு அமைய செயற்படத் தவறினால் சி.ஐ.டி.யின் பணிப்பாளர் மன்றில் நேரடியாக ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே அந்த உத்தரவில் மேலும் தெரிவித்திருந்தார்.