(இராஜதுரை ஹஷான்)

பாடசாலை மாணவர்கள் அனைவரும் சுவாசக்கவசம்  (மாஸ்க்) அணிய வேண்டும் என சுகாதார அமைச்சோ, கல்வியமைச்சோ  அறிவுறுத்தவில்லை.

தேவையாயின் அரசாங்கமே  உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கும். ஆகவே மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தம் செய்ய வேண்டிய தேவை தற்போது கிடையாது.

பெற்றோர் அச்சம் கொள்ள வேண்டாம் என  தவகல் மற்றும் தொடர்பாடல் உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொனோரா வைரஸ் தொற்றினை ஒரு தரப்பினர் தங்களின் சுய தேவைகளக்காக  பயன்படுத்திக் கொள்ள முனைகின்றார்கள்.

மூக்கு பகுதியை மறைக்கும் வகையிலான  மாஸ்க் அணியுறைக்கான தட்டுப்பாடு தற்போது ஏறபட்டுள்ளன.

அரசாங்கம் இதனை இலவசமாக வழங்க வேண்டும் என எதிர்தரப்பினர் குறிப்பிடுகின்றார்கள்.

மக்களுக்கு மாஸ்க் முகமூடியினை இலவசமாக வழங்குவது ஒன்றும் அரசாங்கத்திற்கு இயலாத காரியமல்ல மக்கள் அனைவரும் இதனை  பாவிக்க வேண்டும் என்ற தேவை  தற்போது கிடையாது.

பாடசாலைகளில் இந்நோய் தொற்று அதிகமாக பரவும் என்று வெளியான போலியான  செய்தியை கேட்டு பெற்றோர் பீதியடைந்துள்ளார்கள்.

பெற்றோரின் நிலைமையினை எம்மால் புரிந்துக் கொள்ள முடியும். ஆனால் உண்மை  தன்மையினையும் அனைவரும் விளங்கிக் கொள்ள  வேண்டும்.

கொனோரா தொற்று நோய் தாக்கத்திற்கு இலங்கை பிரஜைகள் எவரும் உள்ளாகவில்லை.

ஒரு சீன நாட்டு பெண்மணி மாத்திரமே வைரஸ் தொற்றுக்குள்ளாகி  முழுமையான சிகிச்சை பெற்று பாதுகாப்பான முறையில்  வைத்தியசாலையில் உள்ளார்.

அத்துடன் சுகாதார அமைச்சு உலக சுகாதார தாபகத்தின்  அறிவுறுத்தலுக்கு அமைய அனைத்து செயற்திட்டங்களையும்   முன்னெடுத்துள்ளது.

விமான நிலையம், துறைமுகம் ஆகியவற்றில் தீவிரமான பாதுகாப்பு  மற்றும் பரிசோதனை நவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாடசாலை மாணவர்கள் அனைவரும் மூக்கு பகுதியை மறைக்கும் விதத்தில் மாஸ்க் அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சோ, கல்வி அமைச்சோ குறிப்பிடவில்லை. 

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளையும், தற்போது இடம் பெறும் பாடசாலை விளையாட்டு போட்டிகளையோ இடை நிறுத்த வேண்டிய தேவை கிடையாது.

பொது மக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என  சுகாதார  அமைச்சு  குறிப்பிட்டால் அதனை அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக  அறிப்பதுடன் மாஸ்க் இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என அவர் தெரிவித்தார்.