ஜேர்மனிய  டுஸெல்டோர்ப் நகரிலுள்ள அகதிகள் முகாமில்  ரமழான் நோன்பு உணவு தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையொன்றையடுத்து சினமடைந்த குடியேற்றவாசிகளால் அந்த முகாம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில்  282  குடியேற்றவாசிகள் தங்கியிருந்த  பகுதி முழுமையாக எரிந்து  கருகியுள்ளது.

அந்த முகாமில் தங்கியிருந்த ஒரு குழு ரமழான் நோன்பை தீவிரமாக அனுஷ்டிக்க விரும்பிய அதேவேளை, பிறிதொரு குழு வழமை போன்று உணவுகள் பரிமாறப்படுவதை விரும்பியதாக  கூறப்படுகிறது. 

இந்நிலையில் நோன்பு நோற்காத குழுவினர்  காலை வேளையில்  தமக்குப் பரிமாறப்பட்ட உணவு போதுமானதாக இல்லை என முறைப்பாடு செய்ததையடுத்து  அங்கு  மோதல் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து அந்த முகாமிற்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ பரவ ஆரம்பித்ததையடுத்து அங்கிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால்  எவரும் காயமடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் சிலர் புகையால் மூச்சுத் திணறலுக்குள்ளாகியிருந்ததாக கூறப்படுகிறது.

 இதனையடுத்து அந்த முகாமிற்கு தீ வைத்த குற்றறச்சாட்டில்  8 பேரைக் கைதுசெய்த பொலிஸார்,  அவர்களில் 26  வயதுடைய இரு வட ஆபிரிக்க இளைஞர்களை தடுத்துவைத்துள்ளனர்..

பிராந்திய விமான நிலையத்துக்கு அண்மையில் அமைந்துள்ள மேற்படி அகதிகள் நிமுகாமில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தால்  8  மில்லியன்   ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த முகாமில் பிராதனமாக  சிரியா,  ஈராக்,  ஆப்கானிஸ்தான் மற்றும் வட ஈராக்கைச் சேர்ந்த குடியேற்றவாசிகள் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.