மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் பிணை முறி மோசடியின் பிரதான சூத்திரதாரி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்று தெளிவாகக் கூறியிருக்கிறார் என  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் நாம் செயற்படுவதாக போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டிய தேவை சுதந்திரக் கட்சிக்கு கிடையாது. இதற்கு முன்னரும் நாம் அவ்வாறு செயற்பட்டதில்லை. இனியும் செயற்படப் போவதில்லை.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் பிணை முறி மோசடியின் பிரதான சூத்திரதாரி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்.

அத்தோடு அப்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, கபிர் ஹசிம் உள்ளிட்டோருக்கும் இந்த பாரிய மோசடியில் பங்குண்டு.

எனவே அர்ஜூன மகேந்திரன் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.